head


மட்டக்களப்பில் புதிய நகரசபை உருவாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

|Sat,11th November 2017|Security| Page Views : 40

மட்டக்களப்பு, கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையாக உருவாக்கக் கோரியும் குறித்த பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கவன ஈர்ப்பு பேரணியும் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி மற்றும் கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த இந்த ஆர்ப்பாட்டத்தினையும் கவன ஈர்ப்பு பேரணியையும் நடாத்தினர்.

?எங்களை காத்தான்குடியுடன் இணைக்காதீர்கள், தமிழரின் பாரம்பரியத்தினை அழிக்காதீர்கள், நில, நிர்வாக ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்? என்ற தலைப்புடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி செல்வி மனோகர் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக மற்றும் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதி தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதுடன் அங்கு 13க்கும் மேற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளும் 25000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையும் உண்டு. இதனை தனி நகரசபையாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

இப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தையாவது வேறு பிரதேசத்துடன் இணைக்கும் நடவடிக்கையை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து கவன ஈர்ப்பு பேரணியானது கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியுடாக மஞ்சந்தொடுவாய் வரையில் சென்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடம் வரையில் நடைபெற்றது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.