head


மருத்துவமனைக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்!

|Thu 07th December 2017|Security| Page Views : 43

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் சீன அரசாங்கத்தின் நட்புறவின் அன்பளிப்பாக 12,000 மில்லியன் செலவில் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

வட மத்திய மாகாணத்தில் மட்டுமன்றி நாடெங்கிலும் உள்ள சிறுநீரக நோயாளிகளுக்காக நிர்மாணிக்கப்படும் இந்த மருத்துவமனை நவீன பரிசோதனை கூடத்தினையும் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டதாகும். சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை, குருதி சுத்திகரிப்பு சேவை உள்ளிட்ட சிகிச்சைகளும், மருத்துவ ஆய்வுகூட சேவைகள், ஆலோசனை சேவைகள் போன்ற சேவைகளும் இவ் வைத்தியசாலையின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

ஆரம்ப சிகிச்சை பிரிவுடன் கூடிய வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, 200 படுக்கை வசதிகளை கொண்ட தங்குமிட சிகிச்சைப் பிரிவு, 100 குருதி சுத்திகரிப்பு வசதியுடைய கட்டில்கள், நவீன வசதிகளைக் கொண்ட சத்திர சிகிச்சைக் கூடம், இரு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் இரத்த வங்கி என்பனவற்றைக் கொண்டதாக இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையில், இன்று இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் நட்புறவின் ஊடாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

அன்று நாட்டின் அபிவிருத்திக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பாரிய சவாலாகக் காணப்பட்ட, நாட்டிற்கு கிடைக்காதிருந்த சர்வதேச ஒத்துழைப்பினை கடந்த மூன்று வருட காலத்தினுள் சிறப்பாக பெற்றுக்கொள்ள தம்மால் முடிந்துள்ளது என்றும் இன்று எமது தேசத்திற்கு கிடைத்துள்ள இந்த சர்வதேச வரவேற்பானது தனது அண்மைக்கால வெளிநாட்டு விஜயங்களினூடாக தெளிவாக உறுதியாகின்றது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது எத்தகைய அவதூறுகள் கூறப்பட்டாலும் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அபிவிருத்தியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதென தெரிவித்ததுடன் விவசாயம், கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட சகல துறைகளிலும் விரிவான அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நட்பு நாடான சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி , 2015 ஆம் ஆண்டில் தாம் சீனாவிற்கு விஜயம் செய்தபோது சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த விசேட பரிசு தொடர்பாக சீன ஜனாதிபதி உள்ளிட்ட சீன அரசாங்கத்திற்கு இதன்போது நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க,

பொலன்னறுவை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இந்திக்க சம்பத் குமார மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியென்லியங் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.