head


தேர்தல் களம் - 02

பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற செயல்கள்

- கருணாகரன்


|Mon 08th Jan 2017|Security| Page Views : 44

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்துக்குமிடையிலான கடிதப் போரே இந்த வாரங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. பத்திரிகைகள், இணையத்தளங்கள், முகப்புத்தகங்கள், கடைகள், சந்திகள், வாசகசாலைகள், கட்சிப் பணிமனைகள், தொலைக்காட்சிகள் என எல்லா இடத்திலும் இந்த விவகாரமே விவாதப்பொருள் ? பேசுபொருள். சலூனுக்குப் போனால் அங்கேயும் இதைப்பற்றியே கதைக்கிறார்கள். கள்ளுத் தவறணைக்குப் போனால், அங்கும் இதைப் பற்றிய விவாதங்களே நடக்கின்றன.

எல்லா இடங்களிலும் காதைக் கொடுத்துச் சற்று நேரம் ஊன்றிக் கவனித்தால், ?இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? பாக்கிறதுக்கு எவ்வளவோ வேலையளிருக்க, அதையெல்லாம் விட்டுப்போட்டு இப்பிடிக் கடிதமெழுதிக் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான்கள். அரசாங்கத்தோட அடிபட்டுப் பிரச்சினைகளைக் கதைக்கிறதை விட்டிட்டு, தங்களுக்குள்ள அடிபட்டுக் கொண்டிருக்கிறான்கள்... இதுக்குத்தானா இவன்களுனுக்கு வாக்குப் போட்டோம் எல்லாருக்கும் நல்லாய் முத்தித்தான் போச்சு...? என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், இந்த அக்கப்போர் சிலருக்குப் படு சுவாரசியமாகவும் உள்ளது. ?தமிழரசுக் கட்சிக்கு அடி கொடுக்க வேணும்? என்று நினைப்போருக்கு விக்கினேஸ்வரன் அந்த மாதிரி அவல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதைப்போலத் ?தமிழ் மக்கள் பேரவைக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, அதன் நிழலான தமிழ்த்தேசியப் பேரவைக்கும் வெளுத்து வாங்க வேணும்? என்று நினைப்போருக்கு துரைராஜசிங்கத்தின் கடிதங்கள் இனிப்பு.

இதனால், விக்கினேஸ்வரனுக்குப் பின்னால் ஒரு அணியும் துரைராஜசிங்கத்துக்குப் பின்னால் இன்னொரு அணியும் என இரண்டு அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன. கவலைக்குரியது என்னவென்றால், இந்த அக்கப்போரின் பின்னால் இழுபடுவோரில் இளைஞர்களாக இருப்பவர்களில் சிலரும் அடக்கம். இளைய தலைமுறையினர் எப்படியெல்லாம் வழிநடத்தப்படுகிறார்கள் என்று பார்த்தீர்களா?

தமிழ் மக்களின் பிரதான பிரச்சினை என்பது, ஏதோ இந்தக் கடிதப் பிரச்சினைதான் என்பதைப்போல, பொதுக்கவனம் குவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது ஒரு அநாவசியமான பிரச்சினையே. அதை விட இது சிரிப்புக்கிடமான - வெட்கக்கேடான - விசயமும் கூட.

இந்தப்பிரச்சினையைப் பற்றி, இந்தப் பிரச்சினையில் மோதிக் கொண்டிருக்கும் விக்கினேஸ்வரனையும் துரைராஜசிங்கத்தையும் பற்றி, சிங்களத் தரப்பினர் அறிந்தால் மிகமிகச் சந்தோசப்படுவார்கள். ?இதையல்லவா நாங்கள் எதிர்பார்த்தோம். இன்னும் இவர்கள் நன்றாக மோதிக் கொள்ள வேணும்? என்று வாயில் சர்க்கரையைப் போட்டுக் கொள்வார்கள். அந்தளவுக்கு முட்டாள்தனமான விதத்தில் விக்கினேஸ்வரனும் துரைராஜசிங்கமும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இது தனியே விக்கினேஸ்வரனுக்கும் துரைராஜசிங்கத்துக்குமிடையிலான ? தனிப்பட்ட இருவருக்கிடையிலான - மோதல் அல்ல. பொறுப்பு மிக்க இரண்டு தலைவர்களுக்கிடையிலான மோதல். ஒரு அணியைச் சேர்ந்த, ஒன்றாகவே இருக்க வேண்டிய, சேர்ந்து பணியாற்ற வேண்டிய இருவருக்கிடையிலான மோதல். மக்களின் நம்பிக்கையையைச் சிதைக்கும் வகையிலான மோதல். இன்று தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுள்ளே நடந்து கொண்டிருக்கும் மோதல்.

இந்த விவகாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒன்றும் சாதாரணமானவர்களோ, மிகச் சிறிய வயதினரோ அல்ல. ஒருவர் பாதிக்கப்பட்ட சமூகமொன்றைக் மீள் நிலைப்படுத்திக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பிலிருக்கும் வடமாகாண முதலமைச்சர். மற்றவர், தமிழ் மக்களால் ஆதரவளிக்கப்பட்ட பெருங்கட்சியொன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர்.

இவர்கள் இருவருக்கும் தமிழ்ச் சமூகத்தின் நிலைவரத்தில் பெரும் பொறுப்புண்டு. அரசியற் தீர்வைக் காண்பது தொடக்கம் மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுவது வரையிலான பாரிய பொறுப்பிருக்கிறது. அறுபது ஆண்டுகாலமாகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் என்ற வகையில் தலை நிறையச் சுமையுடைய பொறுப்பு. அறுபது ஆண்டுகாலமாகத் தொடரும் இனவொடுக்குமுறையினால் பெரும் பாதிப்பை, பேரழிவைச் சந்தித்திருக்கும் சமூகத்தின் தலைமைச் சக்திகளாக இருப்பதால் உண்டான பொறுப்பு.

வலியிலும் துயரிலும் அழிவிலும் நின்றுகொண்டே மக்கள் இவர்களுக்கான ஆதரவை வழங்கினார்கள். தங்களின் மீட்பர்கள் என்று கருதிக் கொண்டே, அப்படி நம்பிக்கொண்டே இவர்களின் மீது நம்பிக்கை வைத்தார்கள். மக்கள் ஆதரவளித்தபடியினால்தான் இவர்கள் தலைவர்களானார்கள். மற்றும்படி இவர்கள் களமாடியோ, போராடியோ தலைவர்களாகவில்லை.

அப்படி மக்கள் வழங்கிய ஆதரவையும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் இன்று இவர்கள் இருவரும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு இவர்கள் சார்ந்திருக்கும் கட்சியினரும் மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கூட உருப்படியாகச் சிந்திப்பதாக இல்லை. ஆகவே இது மக்கள் விரோதச் செயலே. நிச்சயமாக இது கண்டிக்கப்பட வேண்டிய விசயம்.

இவ்வாறு இவர்கள் அடிபடுவதற்காக மக்கள் இவர்களுக்கு ஆதரவைக் கொடுக்கவில்லை. ஆனால், இவர்களோ சின்னப்பிள்ளைகள் மாதிரிப் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள். இதற்குத் தமிழரசுக் கட்சியும் தாராளமாக இடமளித்துக் கொண்டிருக்கிறது. கட்சியின் தலைமைப்பீடத்திலிருந்தோ அதற்கடுத்த நிலையிலிருந்தோ எந்த விதமான கண்டனங்களும் இந்த விவகாரம் குறித்து முன்வைக்கப்படவில்லை.

உள்ளரங்கில், ஒரு அறைக்குள் வைத்துப் பேசித்தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய விவகாரங்களைச் சந்தி சிரிக்கின்ற அளவுக்கு ஆள் மாறி ஆளாகத் தூக்கிப் பேசுவது இவர்களுடைய அறிவற்ற தனமன்றி ? பொறுப்பற்ற வேலையன்றி - வேறென்ன?

இங்கேதான் நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையில் இது ஏதோ தற்செயலாக ஏற்பட்ட ஒரு பிரச்சினையோ, மோதலோ அல்ல. அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுள்ளே நடந்திருக்கும் முதலாவது முரண்பாடோ மோதலோ கூட அல்ல. கூட்டமைப்பினுள்ளே தொடர்ந்து கொந்தளித்து கொண்டிருக்கும் மோதல்களில் ஒன்றே இது. தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளினால் தொடர்ச்சியாகவே ஏற்படும் மோதல்களில் ஒன்று. இந்த மாதிரியான மோதல்கள் இனியும் நடக்கத்தான் போகின்றன.

ஒரே அணியைச் சேர்ந்தவர்களே இப்படி ஆளாளுக்கு அடிபட்டுக் கொள்வது மக்களுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையுமே பாதிப்புக்குள்ளாக்குகிறது. சில எளிய உதாரணங்கள்.

1. வடமாகாணசபையில் தமிழரசுக் கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அவருடைய அணியினருக்கும் இடையிலான மோதல்களால் அமைச்சரவை மாற்றப்பட்டது. மறுவளத்தில் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை வரை எதிர்ப்புக்காட்டப்பட்டது. தொடர்ந்தும் உறுப்பினர்களுக்கிடையிலான முரண்பாடுகளினால் மக்கள் நலன்சார் விடயங்கள் மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டிருப்பது.

2. வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பாக மாவை சேனாதிராஜாவுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் அந்தத் திட்டம் உருச்சிதைந்தது.

3. வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையத்தை இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட குழப்பங்களால் பல பிரச்சினைகளும் பின்னடைவுகளும்.

4. காணிப்பகிர்வு, தொழில்துறை உருவாக்கம், முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் எதிர் மாறான ? வேறுபட்ட நிலைப்பாடுகளால் தீர்வுகளின்றித் தொடரும் அவல நிலை.

5. அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் முரண்பாடான ? இரண்டக நிலை.

6. மக்கள் நலத்திட்டங்கள், மக்களுக்கான அரசியலை மேற்கொள்வதைப் பற்றிய கரிசனையின்மை.

7. மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு, பதவி விவகாரங்களினால் ஏற்படும் மோதல்களும் பகைமையும்.

8. மாகாணசபைக்குள் நிலவுகின்ற குழப்பங்களும் முரண்களும் ஒத்துழையாமை நிலையும். இதனால் உருப்படியாக எதையுமே செய்ய முடியாத நிலை.

இப்படிப் பல பிரச்சினைகளால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டேயிருக்கிறது. தனக்குள்ளே முரண்பட்டும் மோதிக் கொண்டிருக்கும் ஒரு தரப்பினால் வெளியே என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க முடியாது. வெளிச் சூழலுக்கு ஏற்றவாறு வேலைகளைச் செய்யவும் முடியாது. இதனால்தான் கடந்த எட்டு ஆண்டுகளில் (2009 க்குப் பிறகு) தமிழ்ச் சமூகத்துக்கு எதையுமே செய்யவில்லை என்ற நிலையில் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) இன்று மக்களிடமிருந்து அந்நியப்படும் நிலைக்குள்ளாகியுள்ளது.

உண்மையில் இந்த எட்டு ஆண்டுகளில், யுத்தத்துக்குப் பின்னரான காலச் சூழலில் கூட்டமைப்புக்கே மக்கள் அதிக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். பதிலாக இந்த எட்டு ஆண்டுகளில் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) ஒரு சிறு புல்லைக் கூடப் பிடுங்கவில்லை. ?பிடுங்கியழிப்போம்? என்று சொல்லப்பட்ட பார்த்தீனியம் செடியே இப்பொழுது பல்கிப் பெருகியிருக்கே தவிர, அழியவில்லை.

கடந்த எட்டு ஆண்டுகளில் கூட்டமைப்பு தனக்குள் அடிப்பட்டுக்கொண்டதே அதிக செய்திகளாக வரலாற்றிற் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் இன்று தமிழ்ச் சமூகத்தின் மூத்த அரசியல் தலைவர்களாக இருப்போர் தமிழரசுக் கட்சியிலேயே இருக்கிறார்கள். சம்மந்தன், மாவை சேனாதிராஜா, சி.க. சிற்றம்பலம், குலநாயகம், துரைராஜசிங்கம், சி.வி.கே. சிவஞானம் என்று பலரைச் சொல்லலாம். ஏன் விக்கினேஸ்வரன் கூட ஒரு மூத்த தலைவரே. அத்துடன் தமிழரசுக் கட்சி நீண்ட அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டதும் கூட. ஆனால், அதனுடைய இன்றைய நிலை என்ன? தன்னைத்தானே அழிக்கும் ஒரு கட்சியாக, மற்றச் சக்திகளையும் அழிக்கின்ற சக்தியாக, ஜனநாயகத்துக்கு இடமளிக்காத ஒரு அமைப்பாக தலைகீழாக மாறியிருக்கிறது. அத்துடன், மக்களுக்கு வழிகாட்டவோ, மக்களை மீட்கவோ, மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவோ, மக்களின் மீது அக்கறை கொள்ளவோ முடியாத ஒரு கட்சியாகவும் உள்ளது.

எனவேதான் இன்று தமிழரசுக் கட்சிக்கும் அதனுடைய நிழலாகத் தோற்றம் காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராக மக்கள் திரளத் தொடங்கியிருக்கிறார்கள். உண்மையில் தமிழரசுக் கட்சி ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களுடைய கோபம் என்பது சாதாரணமான ஒன்றாக இல்லை. இன்னும் எங்களை ஏமாற்ற வருகிறார்கள் என்றே மக்கள் சொல்கிறார்கள். இதேவேளை அவர்கள் நம்பிக்கை கொள்வதற்கான மாற்றுத் தலைமையோ மாற்றுச் சக்தியோ மாற்று அரசியலோ வலுவானதாக இல்லாதிருப்பதே வரலாற்றுத் துயரமாகும்.

இதையே தமிழரசுக் கட்சி ? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தனக்கான வாய்ப்பாகவும் தகுதியாகவும் கொள்கிறது. ஆனால், அது தன்னைத் திருத்தியமைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கவே இல்லை. இதை ஊடகங்களும் ஆதரவாளர்களும் சுட்டிக்காட்டாதிருப்பதே தவறு.

எனவே உள்ளுராட்சித் தேர்தல் முடிந்த கையோடு ? பெப்ரவரி 11, 12 ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு யுத்த களத்தை மக்கள் பார்க்கலாம். நிச்சயமாகக் கூட்டமைப்பின் பங்காளிகள் களச் சண்டையில் ஈடுபடுவார்கள். ஊருக்கும் வெட்கமில்லை. யாருக்கும் வெட்டமில்லை. நமக்கும் வெட்கமில்லை என்று காலம் நகரும். சனங்களின் பெருமூச்சுகள் தொடரும்.

புத்தியுள்ள மக்கள் மாற்று அரசியலைக் குறித்துச் சிந்தித்து ஏதாவது செய்தால்தான் உண்டு. இல்லையென்றால் எல்லாமே கோவிந்தாதான்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.