head


லண்டன் விவகாரத்திலிருந்து மற்றைய பாடங்கள் : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் பிரித்தானியாவின் பாசாங்குத்தனம்.

- சாரா திசாநாயக்கா

(இந்த எழுத்தாளர் அயர்லாந்தின் டுபிளின் நகர் பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் அரசாங்கம் சம்பந்தமான பாடசாலையில் ஒரு ஆய்வில் ஈடுபட்டிருப்பதுடன் மற்றும் ஸ்ரீலங்கா தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மூத்த சக ஆய்வாளராகவும் உள்ளார்)

- தமிழில் : எஸ்.குமார்


|fri 09th Feb 2018 11.22AM|General| Page Views : 20

லண்டனில் ஈழத் தமிழர்களின் எதிர்ப்புக்குப் பதிலளிக்கும் வகையில் தூதரக பாதுகாப்பு அலுவலர் பிரியங்க பெர்ணாண்டோ காண்பித்த கழுத்து வெட்டும் சைகை தொடர்பான சமீபத்தையை சம்பவம் மிகவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட முன்னேற்றங்கள் கூட ஏராளமான விவாதங்களைத் தூண்டியதுடன் நிலவும் சூழ்நிலைகளின் கீழ் பொதுமக்களை, சார்பாகவும் மற்றும் விரோதமாகவும் பக்கங்களை எடுக்கவும் வைத்தது.

அதற்கு மாறாக, இந்தச் சம்பவம் மற்றொரு முக்கிய விஷயமான ஸ்ரீலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குழி பறிக்கும் மற்றொரு சிக்கலான பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டுமாறு என்னை நிர்ப்பந்திக்கிறது: பிரித்தானிய அரசு மற்றும் அதன் சட்ட அமலாக்கப் பிரிவின் பாசாங்குத்தனமே அது. இது புதிதான ஒரு விஷயம் என்று சொல்ல அவசியமில்லை. கடந்த பல வருடங்களாக தமிழர் பிரச்சினை என்று வரும்போது நாங்கள் தொடர்ந்து ஸ்ரீலங்காமீது செலுத்தப்படும் ராஜதந்திர ரீதியான பாசாங்குத்தனங்களை சந்தித்து வருகிறோம். யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இது பெரிதும் அதிகரித்துள்ளது. உலகின் மற்றப் பாகங்களில் உள்ள பயங்கரவாதத்துக்கு மேற்கு எந்த ரீதியில் பதிலளிக்கிறது என்பது எங்கள் எல்லோருக்கும் நன்கு அறிந்த விடயமாகும். இந்தக் கட்டத்தில் இரட்டை நிலைப்பாடுகள், அரசியல் சந்தர்ப்பவம் மற்றும் உலக வல்லரசுகளின் கையெழுத்துப் பண்புகளைக் குறிக்கும் குழப்பம் நிறைந்த இராஜதந்திரம் என்பனவற்றை நாங்கள் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறோம். அதைச் சொல்வதினால் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டியதில்லை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யதார்த்தம் நம் முகத்தில் அடிக்கிறது. மேற்குறிப்பிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சுய நலன்களைக் கொண்ட சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானிய வெளியுறுவுச் செயலாளார் பொரிஸ் யெல்சினுக்கு பிரிகேடியரின் இராஜதந்திர ஆவணங்களை திரும்பப் பெறுவதுடன் அவரை ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாடுகடத்தும்படி வலியுறுத்தி விரைவாக ஒரு கண்டனக் கடிதத்தை அனுப்பினார்கள். பெப்ரவரி 5ம் திகதியிட்ட கடிதத்தையே நான் இங்கு குறிப்பிடுகிறேன், இந்தக் கடிதம் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோண் ரெயான் மற்றும் சியோபேன் மக்டொனாக் என்பவர்களால் கையொப்பமிடப்பட்டிருந்தது, இவர்கள் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் (ஏபிபிஜி) முறையே உப தலைவர் மற்றும் மூத்த உப தலைவர் ஆவார்கள். தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவரான கன்சர்வேட்டிவ் கட்சியின் போல் ஸ்களி, அடுத்த நாள் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில் பெருநகரக் காவல்துறையின் விசேட பிரிவினர், பிரிகேடியருக்கு எதிரான ஊடகக் குற்றச்சாட்டுகளின் கண்ணோட்டத்தில் இந்தப் புகார்கள் பற்றி விசாரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு மேலும் ஸ்ரீலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ், ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சில் உத்தியோகபூர்வமான கடும் எதிர்ப்பு ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.

நாட்டின் நீதியான சட்டத்துக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட தார்மீக மனப்பான்மை கொண்ட இந்த அரசியல் தமாஷ் ஆச்சரியம் தருகிறது. துரதிருஸ்டவசமாக இதில் சம்பந்தப்பட்ட கட்சியினர் ஒன்றில் தங்கள் சொந்த நாட்டில் நிலவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களைப் பற்றி மறந்துவிட்டார்கள் அல்லது பொதுவாக அவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை. ஐக்கிய இராச்சியத்தில் ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவதற்கு அழைப்பு விடுப்பது ஒரு குற்றவியல் குற்றம் இல்லை என்றாலும் 2000ம் ஆண்டின் பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சியத்தில் எல்.ரீ.ரீ.ஈ ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதை இங்கு நான் நினைவு படுத்த வேண்டிய அவசியமில்லை. அதன் பிரிவு 13 தெளிவாக வலியுறுத்துவது ?பொது இடத்தில் ஒரு நபர் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் அங்கத்தவர் அல்லது ஆதரவாளர் என்கிற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும் வழியிலான அல்லது அத்தகைய சூழ்நிலையை தோற்றுவிக்கும்(அ) ஒரு ஆடையை அணிந்திருப்பது அல்லது (ஆ) அணிவது, அல்லது ஒரு பொருளை காட்சிப்படுத்துவது அல்லது கொண்டு செல்வது அவர் குற்றம் இழைத்ததாகக் கருதப்படும்? என்று.

கேள்விக்குரிய அந்த ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகள் சித்தரிப்பது, அதில் பங்கு பற்றியவர்கள் காவல்துறை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மோசமான எல்.ரீ.ரீ.ஈ யின் கொடியை அசைத்தவாறு ?எங்கள் தலைவர் பிரபாகரன்? என்று கோஷமிட்டபடி செல்வதையே. அதில் சிலர் முன்புறத்தில் மரணமடைந்த தலைவரின் புகைப்படமும் பின்புறம் ஈழ வரைபடமும் அச்சிட்ட கறுப்புநிறத்திலான சட்டையை அணிந்திருப்பதும் காட்சியளிக்கிறது.

எதிர்வாதம் செய்பவர்கள் கொடிகளைப் பறக்கவிடுவது, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் மகிமைப்படுத்துவது என்று கருதவேண்டிய அவசியமில்லை என்று வாதிடலாம், ஆனால் அத்தகைய தந்திரோபாயமான தர்க்கம் வலுவாகப் பிடித்து நிற்காது. நில அபகரிப்பை நிறுத்துவது, காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைக் கோருவது மற்றும் சுய நிர்ணய உரிமை கோருவது போன்ற சமாதான ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் சட்டத்துக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ளத் தக்கவை. இருப்பினும் அந்தச் செய்தியை உதாரணப்படுத்துவதற்கு, தடை செய்யப்பட்ட ஒரு கொடியை மூலோபாய ரீதியில் தாமாக முன்வந்து பறக்கவிடுவது அத்துடன் கொடூரமானதும் மற்றும் கண்மூடித்தனமானதுமான பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றிய ஒரு தற்பெருமைக்காரனை தங்கள் தலைவர் என்று வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதும் - நிச்சயமாக இந்தப் பிரச்சினை முழுவதையும் ஒரு புதிய நிலைக்கு உயர்த்தும். இது தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை ஆதரிக்கும் செயல் இல்லையென்றால் அது என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் இத்தகைய வெளிப்படையான மீறல் எப்படித் திட்டமிட்டு கண்மூடித்தனமாக அலட்சியம் செய்யப்பட்டது என்பது புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. குற்றவியல் செயற்பாடு அலட்சியம் செய்பட்டது மட்டுமன்றி பானை கேத்திலைப் பார்த்து கறுப்பு என்று குற்றம் சொன்ன கதையாகிவிட்டது: குற்றவியல் நடத்தைக்காக ஸ்ரீலங்கா ராஜதந்திரியை அகற்றும் நிலைக்கு கவனம் திரும்பியுள்ளது.

பிரித்தானிய சட்ட அமலாக்கப் பிரிவு தங்கள் சட்டபூர்வ விதிகளை நிறைவேற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றிவருகிறது, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்ததாகக் கூறப்படுகிறது. 2004ல் ஸ்கொட்லாந்தில் ஒரு மனிதன், ?உல்ஸ்ட்டர் தொண்டர் படை? (யுவிஎப்) என்பதன் ஆரம்ப எழுத்துக்கள் பொறித்த மோதிரம் ஒன்றை அவனது மோதிர விரலில் அணிந்திருந்ததினால் பயங்கரவாதச் சட்டம் 2000ன்படி தண்டிக்கப்பட்டான். 2015ல் ஒருமனிதன் இஸ்லாமிய அரசினது(ஐ.எஸ்) என்று சொல்லப்படும் கொடி ஒன்றை உடலில் போர்த்துக்கொண்டு வெஸ்ட்மினிஸ்ட்டரில் நடந்து சென்றான், அவனது சிறிய பிள்ளையும் அந்தக் கொடியை அசைத்தபடி அவனுடன் சென்றது, அவனைக் கைது செய்யத் தவறியதற்காக பெருநகரக் காவல்துறையினர்மீது கண்டனம் செலுத்தப்பட்டது. அவன் அந்த இடத்தில் விசாரிக்கப்பட்டான் ஆனால் அந்த மனிதன் ஐ.எஸ் இனது நேரடி ஆதரவாளன் என்று காவல்துறையினரால் உறுதிப்படுத்த முடியாதபடியால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொண்டான். மாறாக இரண்டு பலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டக் காரர்கள் 2015ல் இதே பயங்கரவாத சட்டத்தின் 13வது பிரிவின்கீழ் லண்டனில் ஹிஸ்புல்லாக் கொடியை பறக்கவிட்டதுக்காக கைது செய்யப்பட்டார்கள்.

இதேபோல 2017ல் பெருநகரக் காவல்துறையினர், மத்திய லண்டனில் பெல்போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் எவரும் ஹிஸ்புல்லா கொடியைக் கொண்டுசென்றால் கைது செய்யப்படுவார்கள் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். முன்பொரு காலத்தில் ஏப்ரல் 2009ல் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆhப்பாட்டங்களின்போது, எல்.ரீ.ரீ.ஈ கொடிகள் அகற்றப்படும் என்று ஐக்கிய இராச்சிய காவல்துறையினர் தொடர்ச்சியான வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். அதைத் தொடர்ந்து இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்குறித்த கொடியை கொண்டு சென்றார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள், பின்னர் அந்தக் கொடிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் அப்போது முதல் பிரித்தானிய சட்ட அமலாக்கப் பிரிவினர் புலிகள் ஒர தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதை வசதிக்கேற்ப மறந்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறது. கடந்த தசாப்தத்தில் ஒவ்வொரு ஸ்ரீலங்கா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போதும் புலிகளின் கொடி காட்சியளிக்கத் தவறியதே இல்லை, ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகராலயம் அடிக்கடி இதற்கு உத்தியோகபூர்வ எதிர்ப்பைத் தெரிவித்தாலும் அதற்கு மதிப்பளிக்கப்படுவதில்லை, பொது இடத்தில் அந்தக் கொடிகளைக் காட்சிப்படுத்தியதற்காக அவர்களை காவல்துறையினர் கைது செய்யவோ அல்லது தண்டிக்கவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆகவே பிரித்தானிய அரசானது தனது சொந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தனது சொந்த பிரதேசத்திலேயே பயங்கரவாதத்துக்கு திறம்பட உதவுவதுடன் அதனை ஊக்குவித்தும் வருகிறது. அதே சமயம் இத்தகைய மேலதிகச் சட்டப் பயன்பாடு ஸ்ரீலங்கா அரசின் ராஜதந்திரத் தோல்வியை குறிப்பிடுகிறது.

இந்தச் சம்பவத்தில் நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புகளை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா அதிகம் செயல்திறன் மிக்க அணுகுமுறையை எடுக்கவேண்டியது அவசியம். வல்லரசு அரசியலின் உள்ளார்ந்த பாசாங்குத்தனம் காரணமாக, எல்.ரீ.ரீ.ஈ சார்பான செயற்பாடுகளுக்கு எதிரான பிரித்தானிய சட்ட அமலாக்கத்தின் அப்பட்டமான செயலற்றதன்மை இன்னும் தொடரக்கூடும். ஈழவாதிகளோ அல்லது பிரித்தானிய அரசோ தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது: இந்த விடயத்தில் இலக்கிய ரீதியாகவும் மற்றும் அடையாள ரீதியாகவும் புலி தனது கோடுகளை மாற்றிக்கொள்ளாது.

உண்மையில் பிரித்தானிய அரசு வெட்கக்கேடான முறையில் தனது சொந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களையே புறக்கணிப்பதால்தான் ஸ்ரீலங்கா ஒரு இiயாண்மையுள்ள தேசம் என்கிற மதிப்பில்லாமல் எல்.ரீ.ரீ.ஈ நடந்து கொள்கிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக ஸ்ரீலங்காவுக்கு வரும்படி இளவரசர் எட்வேட்டுக்கு விடுக்கப்பட்ட சமீபத்தைய அழைப்பு, ராஜதந்திரரீதியில் செய்ய வேண்டியவைகளின் பட்டியலில் அதன் காலனித்துவ எஜமான்களை சமாதானப்படுத்தும் ஒரு தோல்வியுற்ற முயற்சியை சரி செய்திருக்கலாம், ஆனால் ஐக்கிய இராச்சியத்துக்கும் மற்றும் ஸ்ரீலங்காவுக்கும் இடையே உள்ள சமச்சீரற்ற உறவை வெளிப்படுத்தும் வகையிலேயே அது பயன்பட்டது.

ஸ்ரீலங்கா முன்னெச்சரிக்கையாக அதன் காலனித்துவ கடந்த காலத்தில் இருந்து விடுபட்டு பிரதானமாக வெளிப்புற சூழ்நிலைகள் மற்றும் திருப்திப் படுத்தல்களுக்கு இடங்கொடுக்காத ஒரு சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றுவதன் மூலம் அதிக நன்மைகளை அடைய முடியும். சர்வதேச சமூகத்தின் மேலோட்டமான அங்கீகாரத்துக்கு ஏங்குவதும் மற்றும் மேற்கின் அளவுக்கு மீறிய பொருளாதாரச் சார்பில் தங்கியிருப்பதும் உண்மையான வடிவத்தில் ஸ்ரீலங்காவிடம் இருந்து அதன் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்களாகும்.

அதேவேளை அரசாங்க அதிகாரிகளின் தொழில் நிபுணத்துவம் மிகவும் முக்கியம் வாய்ந்தது, அதே நேரம் இந்தச் சம்பவம் ஸ்ரீலங்கா தனது ஒருமைப்பாடு மற்றும் தேசிய நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் மிகவும் திடமாக நிற்கவேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்ளுவதற்கு ஏற்ற வகையில் ஒரு கண்திறப்பாக இருக்க வேண்டும். ஒரு நாடு செழிப்படைவதற்கான கண்ணோட்டம் அதன் சமூக பொருளாதார வளர்ச்சியின் வரம்புக்கு மட்டும் உட்பட்டதல்ல, ஆனால் அதன் வெளியுறவுக் கொள்கை இயக்கவியலின் சீர்திருத்தங்கள் உட்பட கண்ணியம் சுயமரியாதை என்பனவற்றைக் கொண்ட வலுவான தேசமாக உருவெடுப்பதே ஆகும்.

நன்றி :தேனீ
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.