head


சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறப்பு!

|Tue 13th Feb 2018 10.07AM|General| Page Views : 15

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பேரவை சபாநாயகர் பி.தனபால் நேற்று திறந்துவைத்தார்.

தமிழக சட்டமன்றத்தில் சுதந்திரப்போராட்ட தலைவர்கள் காந்தி, பெரியார், காயீதே மில்லத், மற்றும் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்டவர்களின் பத்து படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அதே அரங்கில் ஜெயலலிதாவின் முழு உருவப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பங்கேற்கவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் படம் சட்டமன்றத்தில் வைக்கப்படக்கூடாது என எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

நேற்று சட்டப்பேரவை செயலரிடம் படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மனு ஒன்றை அளித்திருந்தது.

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை, அரசு விழாக்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கக்கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு நடந்துவரும் நேரத்தில், அவசரமாக வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என திமுக புதிதாக மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

படத்திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவை ஜெயலலிதா என்று குறிப்பிட்டார். ;;
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.