head


இன்று திருநீற்றுப் புதன் (14.02.2018)

|Wed 14th Feb 2018 09.00AMAM|General| Page Views : 36

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று பெப்ரவரி 14 ஆம் நாள் திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த திருநீற்றுப் புதன் , விபூதிப் புதன், சாம்பல் புதன் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இன்றைய திருப்பலி வழிபாட்டின் போது குருவானவர் மனிதா

நீ மண்ணாய் இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய்? என்னும் தொடக்க நூல் வசனத்தைக் கூறி மனிதனின் பூரணத்துவத்தைக் குறிக்கும் இடமான நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளத்தை வரைந்து இறையாசி வழங்குவார்.

இன்றைய நாளில் ஒரு சந்தியும் சுத்தபோசனமும் (மாமிச தவிர்ப்பு) அனுஷ்டிக்க கத்தோலிக்க திருச்சபை கட்டளையிட்டுள்ளது. சிறியவர்களும் நோயாளர்களும் முதியவர்களும் இந்தக் கட்டளையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய புதன்கிழமையிலிருந்து எதிர்வரும் நாற்பது நாட்கள் வரை நமக்கு நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்ப்பதற்கும் இறைவன் மீது விசுவாசம் கொண்டவர்களாக அவர் போதனைகளின் வழி நடக்க இந்த 40 நாட்களும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் மனித மனங்களில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

"நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்" (மத்தேயு 24:12) என்று நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ள இயேசுவின் சொற்களை மையமாக வைத்து, இவ்வாண்டுக்குரிய தவக்காலச் செய்தியை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இன்று சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதனன்று ஆரம்பமாகும்; தவக்காலத்திற்கென, தனது சிறப்புச் செய்தியை வெளியிட்ட பரிசுத்த பாப்பரசர், நம் மனமாற்றத்தின் அருளடையாளச் சின்னமாக, தவக்காலம் வழங்கப்படுகிறது என்று இச்செய்தியை ஆரம்பித்துள்ளார்.

தன் இறுதி நேரம் நெருங்கிவருவதை உணர்ந்த இயேசு, எருசலேமுக்கருகே ஒலிவ மலை மீது அமர்ந்து, தன் சீடர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வேளையில், பல்வேறு துன்ப இடர்கள் சூழும் காலத்தில், பல போலி இறைவாக்கினர் தோன்றி, பலரை நெறிதவறி அலையச் செய்வர் என்று கூறிய வார்த்தைகளை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள், இறைமக்கள் பலர், தற்காலிக இன்பங்களில் தங்களையே இழந்து, அடிமையாகி, தனிமையில் சிறைப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்துள்ளார். போலி இறைவாக்கினர்கள், துன்பங்களுக்கு எளிதான தீர்வுகளை முன்வைத்து, இளையோரை போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதுடன், பயன்படுத்தி, தூக்கியெறியும் உறவுகளையும், நேர்மையற்ற இலாபத்தை ஊக்குவிப்பதையும் தன் தவக்காலச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்தின் மீது வளரும் மோகம், பிறரன்பை அழித்துவிடுகிறது என்பதையும் வலியுறுத்தியுள்ள பரிசுத்த பாப்பரசர், இத்தவக்காலத்தில், செபம், பிறரன்பு செயல்கள், மற்றும் உண்ணா நோன்பு ஆகியவற்றின் வழியே, உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று கூறியுள்ளார்.


பாவச்சேற்றில் சிக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நமது வாழ்க்கைகளை சீர்தூக்கிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் நமக்கு இக்காலப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இறைவன் நமக்கு அருளிய வார்த்தைகளுக்கு நாம் செவிசாய்த்தோமா? இல்லையா என்று நம்மை நாமே பரீட்சித்துப் பார்க்கவேண்டிய தருணம் இது இந்த தருணத்தில் இறைவார்த்தைகள் நமக்குச் சொல்லிய படிப்பினைகள் நம் மனதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நாம் தயார்ப்படுத்தலில் இறங்கவேண்டும்.

அதற்கான அர்ப்பண வாழ்வில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அது நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அந்த நாட்கள் நமக்காகவே கொடுக்கப்பட்டுள்ளன.

தவக்காலத்தில் நாம் கைக்கொள்ளும் நடைமுறை வாழ்க்கை முயற்சிகள் ஆன்மீக வழி நின்று நம்மை புதிய மனிதர்களாக மாற்றிக் கொள்வதற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது. இந்த மனமாற்றங்களை நாம் எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றோம்

நமது ஆசாபாசங்களை ஒறுத்து நம்மாலான தானதருமங்கள் உதவிகளை நம்மைச் சார்ந்தவர்களுக்கு செய்யலாம். நாம் மனிதம் மறந்தவர்களாக வாழ்ந்திருக்கலாம். அந்த வழியை மாற்றி மனிதம் பேணும் மானிடர்களாக வாழ்வதற்கு தயாராகவேண்டும். இன்றைய நவநாகரீக உலகில் ஆன்மீக வாழ்வு நிலைகள் மறக்கப்பட்டு மழுங்கடிக்கப்பட்டு வருவதற்கு நாமும் ஒரு காரணியாக இருக்கின்றோமா? நம்மில் பலருக்கு எப்போது திருநீற்றுப் புதன் என்பது கூடத் தெரியாமலிருக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வேகமான வாழ்வு நம்மை இறைவனிடமிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கின்றது.

நாம் மட்டுமல்ல நம் குடும்பம் நம் அயலார் நம்மைச் சார்ந்தவர்கள் எல்லோருமே இறைவனின் வழி நின்று இறைவிசுவாசத்தின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வாழ வழிசொல்லும் தூண்களாக மாற்றும் வல்லமையை இத் தவக்காலத்தில் நாம் பெற்றுக்கொள்ள திடசங்கற்பம் பூணுவோம். இறைவனை மறந்தவர்களிடம் நாம் சென்று விசுவாசப் பரப்புதலை, இறைவழிபாடுகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி இறைவன் பால் அவர்களை நாம் திருப்பிக் கொள்ள இந்த காலத்தை பயன்படுத்தவேண்டும். மன்னிக்கும் மாண்பை வளர்க்கவேண்டும். தவக்காலத்தில் இறைவனின் திருச்சிலுவைப் பாதை வழிபாடுகள் மக்களை சென்றடைய நம்மாலான முயற்சிகளை எடுக்கவேண்டும்.

இன்று நாம் காணும் உலகம் பணத்திற்கான பந்தயத்தில் முயல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்தப் பந்தயத்தில் பந்தம் பாசம் மனிதநேயம் ,மன்னிப்பு,இறைவழிபாடு, குடும்ப செபமாலை ஒன்றிணைந்த வாழ்வு எல்லாம் மெல்ல மெல்ல வேரறுக்கப்படுகின்றது.

இந்தக் காலகட்டங்களில் நமது மனங்கள் இறைவனின் பால் ஈர்க்கப்பட்டு உள்ளங்கள், இல்லங்கள் தோறும் செப, தவ முயற்சிகளால் நிரம்பப் பெற்று பாவங்களை வென்று மாற்றம் பெற்ற புதிய மனிதர்களாக நாம் இறைவனை நோக்கி பயணிக்க உறுதி கொள்வோம்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.