head


தேர்தல் தோல்வி: அரசு என்ன செய்யப் போகிறது

- கருணாகரன்


|Wed 14th Feb 2018 04.25PM|| Page Views : 19

உள்ளுராட்சி சபைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்களை உருவாக்கப்போகிறது. உள்ளுர் மட்டத்தில் மக்களுக்கான உட்கட்டுமான விரRanil-maithriுத்திகளைச் செய்வதற்குரிய - மக்கள் அதிகாரத்துக்குரிய இந்தத் தேர்தல், வேறு விதமாகக் கையாளப்பட்டு இன்று அரசியல் முக்கியத்துவம் மிக்கதொரு தேர்தலாக மாறியுள்ளது. ஏறக்குறைய பாராளுமன்றத் தேர்தல் அளவுக்கு முக்கியத்துவத்தைப் பெற்று உயர்ந்துள்ளது.

இதில் மகிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதற்கு 44.65 % வாக்குகள் கிடைத்துள்ளன. 239 சபைகளை அது கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 32.63 % வீதமும் மைத்திரியின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு (சிறிலங்கா சுதந்திரக்கட்சி அணி) 8.94 % வீதமும் பெற்றுள்ளன என தேர்தல் திணைக்களத்தை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஐ.தே.கவுக்கு 41 சபைகளும் மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு) 10 சபைகளும் ஆட்சியமைப்பதற்குக் கிடைத்துள்ளன.

இது தெற்கில் ஆட்சி வலுவை - அரசாங்கத்தின் செயற்பாட்டை நெருக்கடிக்குள்ளாக்கப்போகிறது. உள்ளுராட்சித் தேர்தல் என்றாலும் இன்றைய சூழலில் இந்த முடிவுகள் நாடு தழுவிய அளவிலும் அரசாங்கத்திலும் தாக்கங்களை உண்டாக்கக் கூடியன. ஆகவே மகிந்த ராஜபக்ஸ பெற்றிருக்கும் இந்த மாபெரும் வெற்றி நிச்சயமாகப் பல மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. மகிந்த தரப்பை நோக்கி உள் நாட்டிலும் வெளியுலகிலும் ஆதரவுத் தளம் கட்டமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு. தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட பெரிய நாடுகள் மகிந்த ராஜபக்ஸவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன. வெற்றியடைந்தவர்களை ? மக்களின் அங்கீகாரம் பெற்றவர்களை - வெற்றிகரமாகக் கையாள்வதே அரசியல் வெற்றி என்ற அடிப்படையில் இந்த நாடுகள் வாழ்த்துத் தெரிவித்து இதை ஆரம்பித்துள்ளன.

மறு பக்கத்தில் ஆட்சியிலிருக்கும் நல்லாட்சி ? கூட்டரசாங்கத்தின் ஆயுட் காலத்தைப் பற்றிய பதட்டம் உருவாகியுள்ளது. மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற மகிந்த தரப்பை நோக்கி சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தாவக்கூடும். ஏற்கனவே அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்த மகிந்தவிடம் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கூட்டாட்சியின் ஆளுள் எவ்வளவு காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. அப்படித்தான் ஆட்சி நீடித்தாலும் அரசியலமைப்புச் சாசனத்திருத்தமோ புதிய உருவாக்கமோ தொடர்ந்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவடையக் கூடிய சாத்தியங்களே தென்படுகின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியலமைப்புத் தொடர்பான பேச்சை முன்னெடுப்பதற்குரிய துணிச்சலை ஐ.தே.கவுக்கும் (ரணிலுக்கும் மைத்திரிக்கும்) சு.கவுக்கும் கொடுக்காது. ?இடைக்கால அறிக்கை கொழும்பு ? கோட்டையின் தெருக்களில் தேடுவாரற்றுக் கிடக்கப்போகிறது. அதை ஒரு பிச்சைக்காரர் கூடத் திரும்பியும் பார்க்க மாட்டார்? என்று முன் வீட்டுச் சண்முகம் சொல்வது உண்மை. ?இதைப் பற்றிய பேச்சுகளெல்லாம் களனி கங்கையில் கைவிடப்பட்ட பொருள்? என்கிறார் இன்னொரு நண்பர். இதைவிட அடுத்த கட்டமாக வடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த கையோடு மாகாணசபைகளுக்கான தேர்தல் வரும்.

புதிய தேர்தல் சட்டத்தின்படி அதை நடத்தியே தீர வேண்டும். அப்படி நடத்தினால் அதிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று மகிந்த தரப்பே வெற்றியடையக் கூடிய களநிலவரம் உள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்தாது விட்டாலும் மகிந்தவுக்கே வெற்றியாகும். அவர் சொல்வார், மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் மக்களின் விருப்பத்துக்கு மாறாக - ஜனநாயகத்துக்கு விரோதமாக அரசாங்கம் செயற்படுகிறது. மக்களின் அடிப்படை அரசியல் உரிமை மறுக்கப்படுகிறது என்று மகிந்த தரப்பு மக்களிடம் பரப்புரை செய்யும்.

ஆகவே, மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தினாலும் மைத்திரி ? ரணில் தரப்புக்கு நட்டம். நடத்தாது விட்டாலும் நட்டம். இரண்டு நிலையிலும் பொறியே வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்குக் காரணம், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அரசியல் தீர்வு, அதற்கான அரசியலமைப்பு உருவாக்கம், பொருளாதாரக் கொள்கை, வேலை வாய்ப்புகள், வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற எதிலும் வினைத்திறனுடன் செயற்படவில்லை என்பதாகும். அத்துடன், வெளிப்படையான ? உறுதியான எத்தகைய நிலைப்பாட்டையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. இனியும் துணிச்சலோடு அதை முன்னெடுக்கக் கூடிய அளவுக்கு அதனிடம் துணிச்சல் இல்லை என்று மக்கள் கணித்துக் கொண்டமையே ஆகும்.

இன்னும் இதைச் சற்று பின்னோக்கிச் சென்று விரித்துப் பார்த்தால், அரசியல் தீர்வு, அதற்கான அரசியல் சாசன உருவாக்கம், போருக்குப் பின்னரான அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு, ஜனநாயக மேம்பாடு, அதிகாரத்தைக் குறைத்தல், அச்சமற்ற அரசியற் சூழலை உருவாக்குதல் என்றெல்லாம் பேசப்பட்டு, உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் இதில் எதையுமே முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற கடுப்பு தென்பகுதி மக்களிடத்திலே உருவாகியதே ஆகும்.

மேலே சுட்டப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கான உடன்படிக்கையைச் செய்து ஆட்சிக்கு வந்த சு..கவும் ஐ.தே.கவும் ஆட்சியில் ஏறிய பிறகு தம்மைப்பலப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனவே தவிர, மக்களுக்கு வழங்கிய ஆணையில் அல்ல. இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் தமது நிலைப்பாட்டை தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் மைய அரசாங்கம் மிக மெதுவாகவே காரியங்களை நகர்த்தப்பார்க்கும். இதேவேளை தெற்கிலே ஏற்பட்டிருக்கும் மகிந்த ஆதரவு அலையை பெரும்பான்மையான தமிழர்கள் அச்சத்துடனேயே நோக்குகின்றனர். இது சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சியின் வெளிப்பாடு என்பது அவர்களிற் சிலருடைய எண்ணம். ஆகவே மீண்டும் மகிந்த ஆட்சி ஏற்பட்டு, அச்சச் சூழல் தமிழ்ப் பிரதேசங்களில் உருவாக்கப்படும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இப்படி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எல்லாவற்றையும் நமக்குத் தெரிந்த அல்லது நமது கையிலிருக்கும் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்க முடியாது. அன்றைய சூழல் வேறு. இன்றைய சூழல் வேறு. அதன்றைய தேவைகளும் நிலைமையும் வேறு. இன்றைய நிலைமையும் சூழலும் வேறு. இனி வரும் நாட்களில் கடந்த காலத்தைப்போல மகிந்த ராஜபக்ஸவினால் செயற்பட முடியாது. ஆகவே அவர் புதியதொரு கூட்டு முன்னணியைப் பிரதி நிதித்துவம் செய்தே ஆக வேணும். அது ஜனநாயகத்தையே முடிந்தளவுக்கு முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கும்.

இத்தகையதொரு அரசியல் பின்னணியில்தான் நாம் வடக்குக் கிழக்கில் உள்ள தேர்தல் முடிவுகளையும் பார்க்க வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கில் பெரும்பாலான இடங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது. ஆனால், அதனால் அதிகமான சபைகளில் ஆட்சியமைக்கவே முடியாதிருக்கிறது. ஒட்டு மொத்தமாக வடக்குக் கிழக்கில் உள்ள சபைகளில் ஒன்றிரண்டைத் தவிர, ஏனையவை அனைத்தும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இதனால் தனக்கு வெளியே உள்ள சக்திகளோடு அது பேச்சுகளில் ஈடுபட வேணும். ஆதரவைத் திரட்ட வேண்டும். அப்படி ஆதரவைத் திரட்ட வேண்டுமானால் அது கூட்டமைப்புக்குப் பெரும் சவாலும் அரசியல் முரணும் உள்ள விசயமாக இருக்கும்.

இருந்தாலும் வேறு வழியில்லை. எனவேதான் கூட்டமைப்பு வட்டாரங்கள் ஏனைய கட்சிகளின் கால்களைப் பிடிக்க முனைகின்றன. இதன்படி டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பியை வளைத்துப் போடுவதற்கு சுமந்திரன் முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஈ.பி.டி.பியுடன் மட்டுமல்ல, ஏனைய கட்சிகளோடும் அவர் இணக்கப்பாட்டுக்கு வருவதற்குத் தயார் என அவர் அறிவித்திருக்கிறார்.

ஆனால், இது எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இதுவரையிலும் ஏனைய கட்சிகளை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் சித்தரித்து வந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. அப்படி மக்களிடம் நேரில் கூறிவிட்டு, ஆட்சிக்காக மட்டும் கூட்டுச் சேர முயற்சிப்பதை ஏனைய கட்சிகள் எந்தளவுககு ஏற்றுக்கொளளும் என்று தெரியவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கூட்டமைப்புத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத குழப்ப நிலை மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், உறுதியற்றதொரு அரசியல் சூழல் ? ஆட்சிச் சூழல் உருவாகப்போகிறது என்பது நூறு வீதம் உண்மை.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அதற்கான அதிகாரம் என எதுவுமே இல்லாத நிலையிலிருக்கும் மகிந்த ராஜபக்ஸ, இன்று நாட்டின் எதிர்கால அரசியலையும் அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இந்த நிலையை எட்டுவதற்கு அவருக்கு ஊக்கியாக இருந்தது தற்போதைய அரசாங்கம் மற்றது, அவருடைய விடாமுயற்சியும் துணிச்சமாகும். மகிந்த ராஜபக்ஸவின் இந்த வெற்றியானது தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அரசியலிலும் செல்வாக்கைச் செலுத்தும். பாதிப்பை உண்டாக்கும். இது தொடர்பாக கடந்த 08.02.2018 (தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக) ?தேனீ? இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் கீழ் வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.

?........ தெற்கின் அரசியல் நிலவரத்தை தீர்மானிக்கிற ? அதை நாடி பிடித்துப் பார்க்கிற தேர்தலாக இந்த உள்ளுராட்சித் தேர்தல் அமையப்போகிறது. அந்த வகையில் இது சாதாரணமான உள்ளுராட்சித் தேர்தல் என்ற நிலையைக் கடந்து தேசிய மட்டத்திலான தகமையைக் கொண்டுள்ளது. இவ்வாறான நிலைக்கு இதைக் கொண்டு சென்றது யார்? அல்லது இது எப்படி அந்தளவுக்குச் சென்றது? கீழ் மட்டத்திலிருக்க வேண்டியதொரு தேர்தல் எப்படிப் பெருமட்டத்துக்குச் சென்றது?

நிச்சயமாக இதனுடைய சூத்திரதாரி மகிந்த ராஜபக்ஸவே. அவரே இந்தத் தேர்தலை இந்தளவுக்கு சூடாக்கினார். தன்னுடைய தரப்பின் பலத்தைக் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அவர் இதைப் பயன்படுத்த விளைந்திருக்கிறார். இந்தத் தேர்தலில் தன்னுடைய தரப்பு பெரும் ஆதரவுப் பலத்தைக் கொண்டுள்ளது என அவர் நிரூபிப்பதற்கு இந்தத் தேர்தலை எடுத்துக் கொண்டார்.

அதன் விளைவுகளே இப்படி உள்ளுர் விவகாரங்களும் உள்ளுர் அபிவிருத்தி அடிப்படைகளும் பேசப்படாமல், சர்வதேச அளவிலான விவகாரங்களும் தேசிய மட்டத்திலான விடயங்களும் பேசு பொருளாகின. அரசியல் தீர்வுக்கான இடைக்கால அறிக்கை தொடக்கம் உள்ளுராட்சி சபைகளுக்கு அப்பாலான விடயங்கள் எடுத்தாளப்பட்டன. இதனால் மெய்யான அர்த்தத்தில் இந்தத் தேர்தல் தொடர்பான விடயங்கள் பேசப்படவில்லை....? என.ஆகவே இனி வரும் நாட்கள் நாட்டில் அரசியற் குழப்பங்கள், கொந்தளிப்புகள் நிறைந்த நாட்களாக இருக்கப்போகின்றன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.