head


வங்கதேசத்தின் ஜனநாயகம் நிலைக்குமா?

- சஃபர் ஷோபன்

- தமிழில்: சாரி,


|Wed 14th Feb 2018 04.30PM|General| Page Views : 16

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியக் கட்சி (பி.என்.பி.) தலைவருமான பேகம் காலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் அரங்கில் இருந்த முக்கிய எதிர்க்கட்சியின் தலைவியே தண்டனைக்கு உள்ளாகியிருப்பதால், அந்தக் கட்சியின் எதிர்காலம் மட்டுமல்ல, வங்கதேச ஜனநாயகத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. காரணம், இப்போதைய ஆளும் கட்சியான அவாமி லீக் (ஏ.எல்.), வங்கதேச தேசியக் கட்சி (பி.என்.பி.) ஆகியவைதான் 1991 முதல் மாறிமாறி ஆண்டுவருகின்றன.

வங்கதேசத்தைச் சுமார் 10 ஆண்டுகள் ராணுவம் தொடர்ந்து ஆட்சிசெய்தது. 1991-க்குப் பிறகு நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பி.என்.பி. ஆட்சிக்கு வந்தது. 1996-ல் அவாமி லீக் ஆட்சிக்கு வந்தது. 2001-ல் பி.என்.பி. கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2001 முதல் 2006 வரையிலான ஆட்சிக் காலத்தில் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் அதிகமாகின. அத்துடன் எதிர்க்கட்சிகளும் மதச் சிறுபான்மையினரும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். அவாமி லீக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கையெறி குண்டு வீசப்பட்டதில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இருவர் உட்பட 24 பேர் இறந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இப்போதைய பிரதமர் ஷேக் ஹஸீனா நூலிழையில் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கில் காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரெஹ்மான், அப்போதைய உள்துறை அமைச்சர் லுட்போசமான் பாபர் உள்ளிட்டோர் விசாரிக்கப்படுகின்றனர்.

பி.என்.பி. எதிர்கொண்ட சவால்கள்

ராணுவ ஆதரவுடன் 11.01.2007-ல் இடைக்கால அரசு ஏற்பட்டது. அத்துடன் பி.என்.பி.யின் அராஜக ஆட்சி முடிவுக்குவந்தது. அதன் பிறகு, கடந்த 11 ஆண்டுகளாக அக்கட்சி எதிர்க்கட்சியாகவே நீடிக்கிறது. முதன்முதலில் ஜனநாயக ஆட்சியைக் கலைத்துவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவாமி லீக், பி.என்.பி. இரண்டுமே ராணுவத்தின் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டன. 2008 டிசம்பரில் தேர்தல் நடந்தபோது அவாமி லீக் அமோக வெற்றிபெற்று ஆட்சிக்குவந்தது. அதேவேளையில், பி.என்.பி. கட்சி தேயத் தொடங்கியது. ஆட்சியில் இருந்த அவாமி லீக், அதைப் பயன்படுத்திக்கொண்டு கட்சியை வலுப்படுத்திக் கொண்டது.

எதிர்க்கட்சிக்கு என்னவெல்லாம் சோதனைகள் வருமோ அது பி.என்.பி.க்கும் வந்தது. 2014 தேர்தலுக்கு முன்னால் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பி.என்.பி.யை வலுவான கட்சியாகக் காட்டியதுடன், அது ஆட்சியைப் பிடிப்பதற்கும் சாத்தியக்கூறு இருப்பதாகவும் தெரிவித்தன. இடைக்கால அரசின் தலைமையில்தான் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற அரசியல் சட்டத்தை அவாமி லீக் திருத்தியது. 2007-ல் அப்படி இடைக்கால அரசு தலைமையேற்றதும் ராணுவம் ஆட்சிப் பொறுப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டது. அப்படி நேராமலிருக்கத்தான் அந்தச் சட்டத்தைத் திருத்தியது அவாமி லீக். உண்மையில், 2014 தேர்தலில் போட்டியிட்டிருந்தால் பி.என்.பி. வெற்றி பெற்றிருக்கும். ஆனால், அக்கட்சியோ இடைக்கால அரசு இல்லாவிட்டால் தேர்தலையே புறக்கணிப்போம் என்று அறிவித்தது. பி.என்.பி. போட்டியிடாமலேயே தேர்தல் நடந்துமுடிந்தது. அவாமி லீக் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு மீண்டும் வந்தது.

பி.என்.பி.யால் மக்களைத் திரட்டவோ, ஆட்சியை ஏற்குமாறு ராணுவத்தைக் கேட்டுக்கொள்ளவோ முடியவில்லை. அதற்குப் பதிலாகத் தன்னுடைய கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பேருந்துகளைத் தீயிட்டு எரித்தது. அதனால் பலன் ஏற்படவில்லை என்பதுடன் மக்களும் அதன் பொறுப்பற்ற செயலை வெறுத்தனர். அரசின் சொத்துகளைச் சேதப்படுத்தும் உங்களுக்கு நாட்டை ஆளும் தகுதி உண்டா என்று மக்கள் அக்கட்சியைக் கேட்டனர்.

2014-ல் நாடாளுமன்றத் தேர்தலை பி.என்.பி. புறக்கணித்ததால், அவாமி லீக் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது, வங்கதேச அரசியலில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. 2014 முதல் அவாமி லீக் வளர்ந்துகொண்டே வந்தது. பி.என்.பி. தேய்ந்துகொண்டே சென்றது. அரசின் கடுமையான ஒடுக்குமுறை மட்டுமல்லாமல் அக்கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட முரண்களும், குறைகளும் அதை வலுவற்றதாக்கிவிட்டன. அரசின் அடக்குமுறையும் சாதாரணமானதல்ல. பல பி.என்.பி. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது கட்சியின் அமைப்பையே சீர்குலைத்தது. உள்ளூர் தலைவர்களும் தொண்டர்களும் போலீஸுக்கு அஞ்சி தலைமறைவானதால் கட்சியால் மக்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட முடியவில்லை. பி.என்.பி.யை ஒழிக்க வேறொருவர் தேவையில்லை என்ற அளவுக்கு அந்தக் கட்சியே தன்னை அழித்துக்கொண்டது. முக்கிய எதிர்க்கட்சியாக ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறியது.

அவாமி லீக் மட்டும்தான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது என்று எண்ண வேண்டாம். பி.என்.பி. கட்சியும் பதவியில் இருந்தபோது இப்படித்தான் நடந்துகொண்டது.

இப்போது பதவியில் இருக்கும் அவாமி லீக் அரசின் பதவிக்காலம் 2019 ஜனவரியுடன் முடிகிறது. பிறகு புதிதாகப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். இந்த முறையும் தேர்தலை பி.என்.பி. புறக்கணிப்பதையே அவாமி லீக் விரும்பும். அப்படி நடந்தால், அவாமி லீக் கட்சியால் ஆட்சியில் தொடர்வது எளிதாகிவிடும். அதேசமயம், தேர்தல் சட்டப்படி பி.என்.பி. கட்சியின் அங்கீகாரம் ரத்தாகிவிடும். ஆனால், சர்வதேச சமூகங்களும் இந்தியாவும் பிரதான எதிர்க்கட்சி பங்கேற்காமல் வங்கதேச நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தல் நடைபெறுவதை விரும்பாது. அவாமி லீக் கட்சியுடன் இந்திய அரசு தோழமை உறவு கொண்டிருந்தாலும், எதிர்ப்பின்றி அக்கட்சி ஆட்சியில் நீடிப்பதை முறையானதாக இந்தியா கருதவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இனி என்னவாகும்?

தளர்வுற்ற நிலையில் இருக்கும் பி.என்.பி. போட்டியிட்டால், அது அவாமி லீக் கட்சிக்கே சாதகமாகிவிடும். பி.என்.பி. மிகுந்த வலிமையுடன் தேர்தலில் போட்டியிடுவது அந்நாட்டின் ஜனநாயகத்துக்கு நல்லது. ஜியா தலைமை வகிக்க முடியவில்லை என்றால், பி.என்.பி.க்கு அரசியல் செல்வாக்கு மேலும் குறையும் என்பதும் உண்மை. ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய காலிதா ஜியாவுக்கு அனுமதி கிடைக்காவிட்டாலோ, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதிப்படுத்தப்பட்டாலோ அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடும் தகுதி பறிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு, பி.என்.பி.யின் அழிவும் நிச்சயமாகிவிடும்.

தண்டனைக்கு எதிரான அவருடைய மேல்முறையீடு ஏற்கப்பட்டு, தண்டனைக்கும் தடை விதிக்கப்பட்டால் அவரால் பொதுத் தேர்தலிலும் போட்டியிட முடியும், ஆளும் கட்சிக்கும் கடுமையான சவாலை ஏற்படுத்த முடியும். காலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் சிறைவாசமும் அவருடைய கட்சித் தொண்டர்களை வேறு கட்சிகளில் சேரத் தூண்டும் என்று அவாமி கருதுகிறது. தொண்டர்கள் விலகினாலே கட்சி கலகலத்துவிடும்.

எது எப்படி இருந்தாலும் வலிமையான போட்டியை பி.என்.பி.யால் தர முடியாது. அதற்காக பி.என்.பி. கட்சிக்கு இரங்கற்பா பாடிவிட முடியாதென்றாலும், இந்நிலையிலிருந்து மீண்டு அரசியல் களத்தில் நீடிப்பதும் அக்கட்சிக்கு எளிதாக இருக்காது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் போட்டியின் விளைவு, வங்கதேசத்தையே பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது. இன்னும் ஓராண்டுக்கு பி.என்.பி. தட்டுத்தடுமாறி அரசியல் களத்தில் இருக்கும் என்றாலும், காலிதா இல்லாமல் கட்சி செல்வாக்கிழந்துவிடும். அப்படி பி.என்.பி. களத்திலிருந்து விலகினால் அல்லது இருந்தும் பயனில்லை என்ற நிலை ஏற்பட்டால், அந்த அரசியல் வெற்றிடத்தை வேறு எந்தக் கட்சி நிரப்பும் என்ற அடுத்த கேள்வி எழுந்திருக்கிறது. இது வங்கதேச அரசியல் எதிர்காலத்தை எப்படி வடிவமைக்கும் என்ற கேள்வியும் உடன் எழுகிறது!

-நன்றி:இந்து
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.