head


மத்திய அரசை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். போராட்ட அறிவிப்பு!

||| Page Views: 3

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொழிலாளர் சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் மத்திய பாஜக அரசை எதிர்த்து முக்கியமான போராட்டத்தை அறிவித்திருக்கிறது. தேசிய, மாநில தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் மட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன் வைத்து ஜுலை 24 ஆம் தேதி முதல், 30 ஆம் தேதி வரை, அரசாங்கத்தை எழுப்பும் போராட்ட வாரமாக முன் வைத்து பாரதிய மஸ்தூர் சங்கம் நாடு தழுவிய அளவில் ஆர்பாட்டங்களை நடத்திட முடிவு செய்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் துறை வாரியாக மாநில தலைநகரம், மாவட்டத் தலைமையகம், தாலுகா ஊராட்சி அளவிலும் மற்றும் அனைத்து தொழில் துறை மையங்களிலும் நடத்தப்படும் என்று அச்சங்கம் முடிவெடுத்துள்ளது. ஜூலை 7 ஆம் தேதி பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. சங்கத்தின் தேசியத் தலைவர் சி.கே.ஜி. நாராயணன், பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய் ஆகியோர் பங்கேற்பில் காணொலி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பாரதிய மஸ்தூர் சங்கம் ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் “தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நிலக்கரித் துறையில் நடத்தப்பட்ட 3 நாள் வேலை நிறுத்தம் பற்றி மதிப்பீடு செய்தனர். அத்துறையில் 95மூ நடவடிக்கைகளை வேலை நிறுத்தம் பாதிப்படையச் செய்துள்ளது. வேலைநிறுத்தம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருப்பது தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் நிலக்கரி ஃபெடரேஷன்கள் ஆகியோருக்கு தேசிய நிர்வாகக் குழு பாராட்டுகளைத் தெரிவிக்கிறது” என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் நாட்டின் நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைத்தது மத்திய பாஜக அரசு. அதை எதிர்த்து பி எம் எஸ் வேலை நிறுத்தம் செய்திருந்தது குறிப்பிடத் தக்கது. அந்த செய்திக் குறிப்பில் மேலும், “இப்போது நாட்டில் பற்றி எரியும் ஐந்து முக்கியப் பிரச்சினைகளை பி.எம்.எஸ். அடையாளம் கண்டுள்ளது. அமைப்பு சாரா துறை தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினைகள், ஊதியம் வழங்காதது, மிக அதிக அளவில் வேலை இழப்புகள், தொழிலாளர் சட்டங்கள் இடை நீக்கம் மற்றும் பல மாநிலங்களில் வேலை நேரம் அதிகரிப்பு, தடையற்ற பொதுத்துறை விற்பனை, பாதுகாப்பு மற்றும் ரயில்வே உற்பத்திப் பிரிவுகளை பெரு நிறுவனங்களாக மாற்றுவது, மேலும் ஒவ்வொரு தொழிற்சாலை அளவிலான கூட்டமைப்பு மற்றும் மாநில அலகுகள் அந்தந்த துறை தொடர்பான பிரச்சினைகளுக்காக மத்திய அரசை எழுப்பும் போராட்டம் நடைபெறும்.

இது தொடர்பாக மத்திய அரசை எழுப்பும் போராட்ட வாரத்தின் ஒரு பகுதியாக பி.எம்.எஸ். ஆர்வலர்கள் ஒவ்வொரு துறையின் அடிமட்ட் தொழிலாளர்களைத் தொடர்புகொண்டு மத்திய, மாநில அரசுகளின் தற்போதைய கொள்கைகள், அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல், 4 மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத அவசர சட்டங்கள் மற்றும் 12 மாநிலங்களின் அரசுகள் 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக அதிகரித்திருப்பது உள்ளிட்டவற்றை தொழிலாளர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போராட்ட வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைக்காகவும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளார் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான கா.முருகேசன்



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.