head


இலங்கை நாடாளுமன்றத்தில் இழக்கப்பட்ட தமிழ் பெண் பிரதிநிதித்துவம் - எதிர்கால சிக்கல்கள் என்னென்ன?

|Mon 10th Aug 2020 06:00 AM|Political| Page Views: 56

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தமிழ் நாடாளுமன்ற பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கடந்த முறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த நாடாளுமன்றத்தில் தமிழ் பெண்கள் எவரும் இடம்பிடிக்காமை கவலைக்குரிய விடயம் என பெண் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த 5ஆம் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல பெண்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போட்டியிட்டிருந்தனர்.

இதன்படி, உமா சந்திரா பிரகாஷ், பவதாரணி ராஜசிங்கம், அனுஷா சந்திரசேகரன், சசிகலா ரவிராஜ், விஜயகலா மகேஸ்வரன், அனந்தி சசிதரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா உள்ளிட்ட பலரும் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்

கடந்த காலங்களை விடவும் இந்த முறை பெரும்பாலான பெண்கள் தேர்தல் களத்தில் இருந்த போதிலும், ஒரு தமிழ் பெண் பிரதிநிதித்துவத்தை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும், யுத்தத்தினால் கணவரை இழந்து குடும்ப தலைமைத்துவத்தை ஏற்று நடத்தும் பெண்கள், யுத்தத்தினால் உபாதைக்குள்ளான பெண்கள், கல்வி கற்க முடியாது பிரச்சினைகளை எதிர்நோக்கும் பெண்கள், மலையகத்தில் நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட தமிழ் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே தமிழ் பெண் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் இல்லாது போயுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட உமா சந்திரா பிரகாஷிடம் பிபிசி தமிழ் வினவியது.

2020ஆம் ஆண்டு அமைக்கப்படும் நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளமையானது, எதிர்காலத்தில் சவாலான ஒரு விடயம் என உமா சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார். தமிழ் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளமையானது, நாட்டிலுள்ள தமிழ் பெண்களுக்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டிலுள்ள 52 வீதத்திற்கும் அதிகமான பெண்களில் தமிழ் பெண்களுக்கான குரல், இந்த முறை ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அவளுக்கு ஒரு வாக்கு என்ற தொனிப்பொருள் இந்த முறைத் தேர்தலில் அதிகளவில் பேசப்பட்ட ஒரு விடயம் என கூறிய அவர், பெண் பிரதிநிதித்துவப்படும் இல்லாது போனமைக்கு பெண்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள பிரதான பாரம்பரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட ஓரேயொரு தமிழ் பெண் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி, சசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்டமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்ற அங்கஜன் இராமநாதனுடன் போட்டியிட்ட பெண் வேட்பாளரான பவதாரணி ராஜசிங்கத்திற்கு ஒப்பிட்டு ரீதியில் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதையும் அவர் இங்கு நினைவூட்டினார்.

இந்த நிலையில், எதிர்வரும் 5 வருடங்கள் தமிழ் பெண்களுக்கான சவால் மிகுந்த காலமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட உமா சந்திரா பிரகாஷ் கூறுகின்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போனமை குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட பவதாரணி ராஜசிங்கத்திடம் நாம் வினவினோம்.

தமிழ் பெண்கள் சுமார் 70 வீதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், அதனை தீர்ப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என பவதாரணி ராஜசிங்கம் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான திட்டங்களை வகுப்பதற்கு நாடாளுமன்றமே சரியான இடம் என்ற போதிலும், அங்கு தமிழ் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் குறிப்பிடுகின்றார்.

பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது எனவும் அவர் கூறுகின்றார்.

மாகாண சபையில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் போதுமானது என எண்ணுவார்களாயினும், அது தவறான கருத்து எனவும் அவர் குறிப்பிடுகின்றார். அதற்கான காரணம், மாகாண சபையில் எந்தவிதமான திட்டங்களும் வகுக்கப்படுவதில்லை என கூறிய அவர், நாடாளுமன்றத்திலேயே திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் பிரதிநிதித்துவம் அத்தியாவசியமானது என அவர் தெரிவிக்கின்றார். இந்த பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளமையினால், பெண்களின் 70 வீதமான பிரச்சினைகளும், பிரச்சினைகளாகவே தீர்க்கப்படாது இருக்க போவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை தமிழ் பெண்களின் தேவைகள் அடிப்படை பிரச்சினைகளாகவே இருப்பதாக அவர் கூறுகின்றார். ஆண் ஆதிக்கமே பெண்களின் வாக்குகளையும் தீர்மானிக்க காரணமாக அமைந்துள்ளதாக பவதாரணி ராஜசிங்கம் குறிப்பிடுகின்றார்.

இந்திய வம்சாவளித் தமிழ் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்திய மலையகத்தில் சுயேட்சையாக களமிறங்கிய சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசினார். நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் பிரதிநிதித்துவங்கள் கடந்த காலங்களில் காணப்பட்ட போதிலும், மலையக தமிழ் பெண்களுக்கான திட்டங்கள் முறையாக வகுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மலையக வாழ் தமிழ் பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்குடனேயே தான் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போனமையினால், எதிர்வரும் காலங்களில் தமிழ் பெண்களுக்கான குரல் கொடுக்க ஒருவர் நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டார் என அவர் தெரிவத்துள்ளார்.

மலையகத்திலுள்ள தமிழ் பெண்கள் இதுவரை காலம் எதிர்நோக்கிய அதே பிரச்சினைகள், எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்கு நீடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாறு நாடாளுமன்றம் சென்றுள்ள மலையக தலைமைகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை விடுக்கின்றார். நன்றி: பிபிசி



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.