head


விவசாயிகள் மசோதா: தொடங்கியது 3 நாள் போராட்டம்!

|Saturday, 26th September 2020|| Page Views: 25

இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய விவசாயம் தொடர்புடைய மூன்று மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் நேற்று முதல் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

மூன்று நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் முதல் நாளான வெள்ளிக்கிழமை, விவசாயிகளும் அவர்கள் தொடர்புடைய அமைப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டு ரயில் மறியலில் ஈடுபட்டார்கள்.

இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு சாதகமானது என்று இந்திய அரசு விளக்கம் அளித்தபோதும், அதன் பல அம்சங்கள், விவசாயிகளின் நேரடி வருவாயை பாதிக்கும் என்று விவசாயிகளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் தெரிவித்துள்ளன. ஞ்சாப் மாநிலத்தில் அடிப்படையில் விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளதுடன் அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசும் மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அங்குள்ள எதிர்கட்சியான ஷிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் சமீபத்தில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் பஞ்சாபில் ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்கட்சியும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மசோதாவுக்கு எதிரான அலை அங்கு அதிகமாகவே காணப்பட்டது. தனது மனைவியும் எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் டிராக்டரில் அமர்ந்திருக்க, அவரது கணவர் சுக்பீர் சிங் பாதல் டிராக்டரை ஓட்டியபடி விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்தார். ஹரியாணா மாநிலத்திலும் விவசாயிகள் போராட்டம் கடுமையாக இருந்தது. பல நகரங்களில் இந்த போராட்டம் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதன் அருகே உள்ள நொய்டாவை இணைக்கும் எல்லை பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் தவிர்க்க மாற்று வழயில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.