head


நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் ஷேர் பகதூர் தூபா வெற்றி!

|2022-11-23 15:11:56|Political| Page Views: 120

அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து எந்தவொரு பிரதமரும் முழு பதவிக்காலம் பணியாற்றவில்லை.

இந்த நிலையில் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. அதோடு 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. நாடாளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் மொத்தமுள்ள 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் ஆளும் நேபாள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (யூ.எம்.எல்) தலைமையிலான இடதுசாரி மற்றும் இந்து சார்பு கூட்டணிக்கும் இடையே பலப்பரீட்சை நிலவுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா வெற்றி பெற்றார்.

தனது சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஷேர் பகதூர் தூபா 25 ஆயிரத்து 534 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சாகர்தாகல் 13 ஆயிரத்து 42 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.