head


TNA தயார் அரசுடன் ஆக்கபூர்வமாக செயற்பட!

|2022-11-24 10:29:26|Political| Page Views: 130

சகல மக்களும் திருப்தியடையும் வகையிலான தீர்வையே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளுமென கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் எம்பி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக பணியாற்ற தயாராகவுள்ளதாகவும் சட்டபூர்வமாகவும் நியாயமாகவும் தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் நெருக்கடி பொருளாதார நெருக்கடியுடன் பிணைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், உலகளவில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முக்கியமாகும் என்றும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சுதந்திரத்துக்கு பின்னரான நோயாக, நாட்டில், தேசிய இனப் பிரச்சினை தொடர்கிறது. அதிகார பரவலாக்கம் தொடர்பில், உலகில் 40க்கு மேற்பட்ட நாடுகள் "சமஷ்டி முறை அரசைக் கொண்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வ கட்சி மாநாடு நடத்தி, சிறந்த அறிக்கையை பெற்றுக் கொண்டார்.அத்துடன் 2000 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தேசிய பிரச்சனை தீர்வு தொடர்பில் சட்ட மூலம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த சமயத்தில் அதிகாரப் பரவலாக்கலுக்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே அக்கட்சிகள் எதிர்த்தன.

நாட்டில் அனைத்து மக்களும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவரும் பாதுகாப்பு உணர்வுடன் வாழக்கூடிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். அதை நாம் வரவேற்கின்றோம். இதற்கு நீண்ட காலம் அவசியமில்லை. ஒரு நாளில் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் அதுவே நடைபெற்றன.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், எதிராக வாக்களிக்கவே முதலில் நாம் தீர்மானித்தோம். ஆனால், பின்னர் எதிராக வாக்களிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தோம். கடந்த பத்து நாட்களில் பல சந்தர்ப்பங்களில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தி வருகிறார். கலந்துரையாடுவதற்காக அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதிக்கு மதிப்பளித்து, அவருக்கு எமது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காகவே, நாம் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்தோம்.

வாக்குறுதிகள் உறுதிப்படுத்தும் போதே நல்லிணக்கம் ஏற்படும். உண்மைகளை மூடி மறைத்தால் நல்லிணக்கம் ஏற்படாது. காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ளன. ஒரு விசாரணை கூட நடக்கவில்லை. வாக்குறுதி செயற்பாடுகளில் இருக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.