இந்த உலகின் எதிர்காலத்தை கைகளில் கொண்டு நித்தம் பல கனவுகளை சுமந்து திரியும் சிறுவர்களின் தத்கால சூழலை அழகாகவும் அமைதியாகவும் அமைத்து தரவேண்டிய பொறுப்பு நம் அனைவரினதும் கைகளிலே தங்கியுள்ளது.
எதிர்கால சரித்திரத்தையே தங்களின் திறமையால் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாகக் கருதப்படும் இன்றைய சிறுவர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாகி வருகின்றமை அனைவரும் அறிந்ததேயாகும்.
மிகுந்த பராமரிப்புடன் கண்ணும் கருத்துமாகப் பிள்ளைகளைப் பெற்றோர் வளர்த்தெடுத்த காலம் போய், அவர்கள் பெரும் செல்வத்தை தேடி அலையும் நிலைமை உருவாகியுள்ள இதே சூழலில் இன்னோர் தொகைப் பெற்றோர் தீய பழக்கவழக்கமான ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையே தொலைத்து விடுகின்றனர்.
இந்த நிலையில் பிள்ளைகளின் அன்பு அரவணைப்பு உள்ளிட்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலைக்கு பெற்றோர் உள்ளாகின்றனர். அத்தோடு யாதுமறியா அப்பாவி சிறுவர்கள் குருத்துகளாக இருக்கும் போதே கிள்ளி எறியப்படக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கும் முகம் கொடுக்கின்றனர்.
பிள்ளைகளானவர்கள் தமது பெற்றோரில் தங்கி வாழும் நிலைமை இயற்கையாக இருந்து வருகிறது.
அவர்களின் வழிகாட்டியாகவும் பெற்றோரே இருந்து வருகின்றனர். ஆகையால், சிறுவர்களானவர்கள் அன்பினாலும் பண்பினாலும் பெற்றோரினால் அரவணைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டியவர்களாவர்.
அத்துடன், தமது பெற்றோர் அல்லது தம்மை விட வயதில் கூடியவர்கள் எதனைச் செய்கின்றனரோ, அதனைப் பின்பற்றி நடப்பவர்களாக சிறுவர்கள் இருக்கின்றனர். ஆகையால், பிள்ளைகளுக்கு அருகில் குறைந்தபட்சம் அவர்களின் அன்னையாவது நெருங்கியிருந்து அவர்களை உரிய முறையில் வழிநடத்த வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.
எமது நாட்டில் தற்போதைய காலகட்டத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பின்தங்கிய இடங்களிலுள்ள கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டும் எனும் நோக்கில் கணவன் வேலைக்குச் செல்லும் அதேவேளை, சில மனைவிமார்களும் வேலைவாய்ப்புத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இது இவ்விதமிருக்க, போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோர் அடிமையாகின்ற துர்ப்பாக்கிய சம்பவங்களும் பின்தங்கிய இடங்களில் காணப்படுகின்றன. இவ்விரு சாராரின் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இவ்விரு சம்பவங்களும் பாதகமாக அமைந்து விடுகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
பெற்றோரின் இவ்விரண்டு நடவடிக்கைகளினாலும், தமது சிறுபிள்ளைப் பிராயத்தையே சிறுவர்கள் இழந்து விடுகின்றனர். பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பையும் அரவணைப்பையும் சிறுவர்கள் இழப்பதுடன், சிறுவயதில் தாம் ஓரங்கட்டப்பட்டவர்களாக மனதளவில் தவிக்கின்றனர்.
தனிமையில் ஒருவித ஏக்கத்துடன் வாழும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். காலப்போக்கில் தனிமையானது அவர்களை விரக்தி நிலைமைக்கு இட்டுச்சென்று உளவியல் தாக்கத்துக்கும் உள்ளாகின்றனர்.
இது மட்டுமன்றி சிறுவர்களின் கல்வி மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், அவர்களுக்கு உரிய வேளையில் போஷாக்கான உணவு கிடைக்காமலும் போகின்றன. அவர்களின் தாமாகச் சிந்திக்கும் திறன், அறிவாற்றல் என்பனவும் மழுங்கடிக்கப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் போதைப்பொருள் பாவனை, புகைத்தல், திருட்டு உள்ளிட்ட தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதோடு குற்றச்செயல்களிலும் ஈடுபட எத்தனிப்பவர்களாகவும் உள்ளனர்.
அத்துடன், சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற சம்பவங்களும் எமது நாட்டில் மலிந்து காணப்படுகின்றன.
இவ்வாறானவற்றினால் சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சிறுவர்களின் கல்விக்குத் தடை விதித்தல், ஓடியாடி விளையாடும் சிறுபிள்ளைப் பிராயத்தில் அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக வேலைகளைச் செய்விக்கத் தூண்டுதல், அவர்களை அநாதரவாக பரிதவிக்க விடுதல், அவர்களைத் தண்டித்தல், பாராபட்சமாக நடத்துதல் உள்ளிட்டவை சிறுவர் துஷ்பிரயோகங்களாகக் கொள்ளப்படுகின்றன.
இச்சிறுவர் துஷ்பிரயோகங்களானவை உடல், உள, உணர்வு ரீதியானதும் புறக்கணிப்பு ரீதியானதுமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகையால் சிறுவர்களை பாதுகாத்து, அவர்களின் உரிமைகளை மதித்து, அவர்களைக் கண்ணியமாக நடத்தி, ஆரோக்கியமானதொரு சிறுவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோரிடமே உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் தாய்மார்கள், தமது பிள்ளைகளை பாட்டி, சகோதரர் உள்ளிட்ட உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கின்றனர். இதேவேளை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள பெற்றோர், தமது பிள்ளைகளை அநாதரவாக பரிதவிக்க விடும் நிலைமையை எமது நாட்டில் பரவலாக அவதானிக்க முடிகிறது.
பெற்றோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதால், சுமார் 12 ஆயிரம் சிறுவர்கள் அநாதை நிலையங்களில் விடப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பெரும்பாலான பெற்றோரின் பிள்ளைகள், தமது பாட்டன் அல்லது பாட்டியுடனையே சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோயியல் மருத்துவ நிபுணர், வைத்தியர் தீபால் பெரேரா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சுற்றுலா வீசாவில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் பலர் அங்கு அநாதவராகக் கைவிடப்பட்ட சம்பவம் அண்மையில் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்தது. எனவே, இவ்விரு சாராரின் பிள்ளைகளும் அன்பு, அரவணைப்புக்காக ஏங்கியே தமது காலத்தைக் கழிக்கும் துரதிஷ்டவசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்நிலைமை தொடருமாயின் நாட்டின் பொறுப்புகளை ஏற்பதற்குக் கூட ஆரோக்கியமான தலைமுறை இல்லாத நிலைமை ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ்வதற்கான திறன்களை சிறுவர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும். அந்த வகையில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் விதம், அப்பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை எடுக்கும் மனப்பக்குவம், அவர்களின் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லும் நடைமுறை, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடல் உள்ளிட்டவை தொடர்பில் சிறுவர்களுக்கு மனத் தைரியத்தை பெற்றோரால் மாத்திரமே உரிய முறையில் வழங்க முடியும்.
அத்துடன், சிறுவர்கள் சாதிக்கும் விடயங்களை, அவர்களின் திறமைகளைப் பாராட்டுவதற்கு பெற்றோராலேயே முடியும். அவர்களுக்குரிய வயதில் பாராட்டுதல் கிடைக்கா விட்டாலோ, மகிழ்ச்சியான தருணம் அமையா விட்டாலோ காலப்போக்கில் அவர்கள் மனதளவில் கவலையை உணர்வதுடன், தவறான வழிகளுக்குச் செல்லவும் காரணமாகின்றது.
போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெற்றோரின் பிள்ளைகளும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வோரின் பிள்ளைகளும் நாளடைவில் உடல், உள ரீதியாக மெது மெதுவாக பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும். ஏனெனில், இவ்வாறான சிறுவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான தருணம் என்பது குறைவாகவே காணப்படுகின்றது.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் கவலை, யோசனை, தீர்மானம் எடுக்க முடியாமை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். உடல் ரீதியாக உடல் மெலிவு, கொழுப்புக் கூடி உடல் பருமன் அதிகரித்தல், உறக்கமின்மை போன்றவற்றுக்கும் அவர்கள் உள்ளாகின்றனர்.
நாளடைவில் இவ்வாறான சிறுவர்கள் மத்தியில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கும் ஆளாகக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
இவ்வாறிருக்க, இச்சிறுவர்களின் எதிர்மறையான குணாதிசயங்களாகக் கோபம், சண்டை, ஆத்திரமடைதல் உள்ளிட்டவை காணப்படுவதுடன், இவ்வாறான எதிர்மறைக் குணாதிசயங்களின் விளைவால் இச்சிறுவர்கள் அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு நிந்திக்கப்படும் நிலைமைக்கும் உள்ளாவதோடு அவர்களது நற்பெயரும் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆகையால், குடும்பமொன்று கட்டமைப்புக்குள் இருந்து தமது பிள்ளைகளுக்கு சமூகத்தில் இருக்கும் நல்லதையும் தீயதையும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
தாங்கிக்கொள்ள எத்தனை உறவுகள் இருந்தாலும், பெற்றோருக்கு இணையாக இந்த உலகில் எந்த உறவும் இல்லை. ஆகவே, பெற்றோராகிய நீங்களே உங்கள் பிள்ளைகளின் வளமுடைய எதிர்காலத்துக்கு பொறுப்பாவீர்கள்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.