head
Join Us


சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கறுப்பு கொடி போராட்டம்!

|2024-07-04 12:25:12|General| Page Views: 131

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 25 கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் நாட்டுப்படகு கடற்றொழிலாளர்கள் தங்களது படகுகளில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தொண்டி அடுத்த நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மீன் பிடிக்க சென்று திங்கட்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நான்கு நாட்டு படகுகளையும் அதிலிருந்து 25 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் ஜூலை 15ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்தும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாட்டுப்படகு கடற்றொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் நாட்டு படகு கடற்றொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார்; 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று மாலை கடற்றொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு மீன் பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் கருப்பு கொடி ஏந்தியுள்ளனர்.

மேலும் கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி ஜூலை 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாம்பன் சாலை பாலத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பின்னர் மாலை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயிலை மறித்து திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழிலாளர்கள் தங்களது படகுகளில் கறுப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.