Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

சுரேஷ் சலேவின் மனைவி ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம்

12 Jun 2026, 02:54 PM
பார்வைகள்: 4,490
சுரேஷ் சலேவின் மனைவி ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்காக அவரது மனைவி மற்றும் சட்டத்தரணி ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இரண்டு தனித்தனி கடிதங்களை அனுப்பியுள்ளனர்.2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளரான சுரேஷ் சலே, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கட்சிக்காரரின் நிலையை தொடர்ந்து கண்காணிப்பதும், அதுகுறித்த தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதும், அவரது உரிமைகளையும் நலனையும் உறுதி செய்வதும் தனது தொழில்முறைப் பொறுப்பு என சட்டத்தரணி அசித் சிரிவர்த்தன தெரிவித்துள்ளார். தனது கட்சிக்காரருடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்காக அவரை தினமும் சந்திக்க அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.