Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

2027 வரவு செலவுத் திட்டத்தில் இந்து கலாசார திணைக்களத்திற்கு கூடுதல் நிதி கோரிக்கை..

16 Aug 2026, 09:47 AM
பார்வைகள்: 496
2027 வரவு செலவுத் திட்டத்தில் இந்து கலாசார திணைக்களத்திற்கு கூடுதல் நிதி கோரிக்கை..

இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இந்து கலாசார திணைக்களத்திற்கு ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேவையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்குதல், பல்வேறு சமய மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளுக்கு அப்பாலும் இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இச்செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி, வலுப்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இதற்காக 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் திணைக்களத்தின் திட்டங்களை விரைவுபடுத்துவதுடன், சமய மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.