Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

தந்தை செல்வா நினைவுத் தூபி உடைப்பு; தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்!

02 Sep 2026, 10:24 AM
பார்வைகள்: 201
தந்தை செல்வா நினைவுத் தூபி உடைப்பு; தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழரசுக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தெல்லிப்பளை பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் இயல்பானவை என்ற போதிலும், அவை நினைவுத் தூபி ஒன்றை சேதப்படுத்தும் அளவுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழரசுக் கட்சியை தற்போது விமர்சிப்பவர்கள்கூட தந்தை செல்வாவின் செயற்பாடுகளை விமர்சிப்பதில்லை. இவ்வாறான நிலையில், அவரது நினைவுத் தூபியை உடைத்து சேதப்படுத்தியுள்ளமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அனைவரது மனதிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நினைவுத் தூபியை சேதப்படுத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்வதற்கு பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.