Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் அறிவால் பலம்பெற வேண்டும் – சஜித்

08 Sep 2026, 11:52 AM
பார்வைகள்: 719
ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் அறிவால் பலம்பெற வேண்டும் – சஜித்

நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், மக்கள் அறிவால் பலம்பெற்ற சமூகமாக மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தினருக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தொடர்ந்தும் ஏமாற்று அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

தேர்தல் காலங்களில் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் குறைந்து வரும் நிலையிலும், நாட்டில் எரிபொருட்களுக்கு தொடர்ந்தும் வரிகள் விதிக்கப்படுவதாகவும், மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாகக் கூறிவிட்டு தற்போது அதனை அதிகரித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம், தற்போது எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களின் மாபியாவுக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களை வாயில் கடித்துக்கொண்டு, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபாய் செலவாகும் என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரே தெரிவித்துள்ள நிலையில், 120 ரூபாயை நிலையான கொள்வனவு விலையாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக விவசாயிகளுக்கு ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 17 ரூபாய் நட்டம் ஏற்படுவதாகவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் சமகால அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் குறித்து போதிய விழிப்புணர்வைப் பெறாததே இவ்வாறான நிலைமைகளுக்கு காரணம் எனத் தெரிவித்த அவர், மக்கள் அறிவால் பலம்பெற்ற சமூகமாக மாற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கல்வித்துறையில் பல்வேறு குறைபாடுகள்

நாட்டின் கல்வித்துறையில் ஆறு பிரதான தரப்புகள் காணப்படுவதுடன், அவற்றுக்கு இடையில் பல்வேறு குறைபாடுகளும் முரண்பாடுகளும் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சில பாடசாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் பொய்யான வாக்குறுதிகளையோ கானல் நீர் கனவுகளையோ வழங்காது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

கவர்ச்சிகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆசிரியர்களை நடுவீதியில் கைவிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இலவசக் கல்வியிலும் பல்வேறு பேதங்கள் காணப்படுவதாகவும், தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளுக்கு இடையில் தெளிவான இடைவெளி காணப்படுவதாகவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

அரசாங்கங்கள் மாறும்போது பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இறுதியில் கல்வியைப் பாதுகாத்து வரும் ஆசிரியர்களும் மாணவர்களுமே பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பக் கல்வி மட்டத்திலிருந்தே கல்வி முறை நவீனமயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், மனப்பாடக் கல்வி முறையிலிருந்து விடுபட்டு, சவால்களுக்கு முகங்கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய கல்வி முறையை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய நிலையில் பல பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைப்பதற்குத் தேவையான உபகரணங்கள் போதியளவில் இல்லை எனவும், அவற்றை கொள்வனவு செய்வதற்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், மாணவர்களில் 40 வீதமானோருக்குக்கூட ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான போதிய அணுகல் வசதி இல்லை எனத் தெரிவித்த அவர், ஆங்கில மொழி மூலமான கல்வியை ஊக்குவிப்பதுடன், காலாவதியான பிற்போக்கான சிந்தனைகளிலிருந்தும் சமூகத்தை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.