Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொருளாதாரம்

மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு – பொதுமக்களிடம் நன்கொடை கோரிக்கை

05 Oct 2026, 02:57 PM
பார்வைகள்: 1,110
மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு – பொதுமக்களிடம் நன்கொடை கோரிக்கை

மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், அவற்றை நன்கொடையாக வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோலோஸ்டமி பைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்குவது மிகவும் அவசியமானது என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நன்கொடையாக எதிர்பார்க்கப்படும் மருந்துகள்:

  • Tigecycline – 50 மில்லிகிராம் ஊசி மருந்து
  • Methotrexate – 500 மில்லிகிராம் ஊசி மருந்து
  • Fluorouracil – 1 கிராம் ஊசி மருந்து
  • Methotrexate – 2.5 மில்லிகிராம் மாத்திரைகள்
  • Voriconazole – 200 மில்லிகிராம் மாத்திரைகள்
  • Chlorambucil – 2 மில்லிகிராம் காப்ஸ்யூல்கள்

மேலும், வயது வந்த நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் கோலோஸ்டமி பைகள் மற்றும் தட்டுகள், அத்தியாவசிய அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பயன்பாட்டுப் பொருட்களையும் நன்கொடையாக வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, நன்கொடையாக வழங்கப்படும் மருந்துகள் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையால் (NMRA) அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு மருந்துக்கும் உரிய அசல் கொள்வனவு ரசீது சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் உள்ளிட்ட நன்கொடைகள் வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.