Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவுகள் யாப்பு மீறி இடம்பெற்றன – பிருந்தாபன் குற்றச்சாட்டு இலங்கைத் தமிழரசு

18 Jun 2026, 02:40 PM
பார்வைகள்: 1,661
தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவுகள் யாப்பு மீறி இடம்பெற்றன – பிருந்தாபன் குற்றச்சாட்டு  இலங்கைத் தமிழரசு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட மற்றும் தொகுதிக் கிளைகளுக்கான புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு, கட்சியின் யாப்பு விதிமுறைகளுக்கு முரணாக இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணித் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழுவின் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், அண்மையில் நடைபெற்ற நிர்வாகத் தெரிவுக் கூட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கேசன்துறை தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு, மாவட்டத் தலைவர், செயலாளர் மற்றும் ஏற்கனவே செயற்பட்டு வந்த தொகுதி நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்படாமல், கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் குறிப்பிட்ட உறுப்பினர்களை மட்டும் அழைத்து நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணான செயற்பாடாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, வட்டுக்கோட்டைத் தொகுதியில் “வெற்றிடம் நிரப்புதல்” என்ற பெயரில் புதிய நிர்வாகத் தெரிவு நடத்தப்பட்டதாகவும், அதற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், யாழ்ப்பாண மாவட்டக் கிளை உத்தியோகத்தர்கள் தெரிவுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இல்லாமல் நடைபெற்றதுடன், அதற்கு பதில் பொதுச் செயலாளர் தலைமை தாங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு உரிய இடமளிக்கப்படவில்லை என்றும், தலைமைப் பீடத்தின் தீர்மானங்களுக்கு எதிராக மறு தெரிவுகள் இடம்பெறக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பிருந்தாபன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.கட்சியின் உள்நாட்டு ஜனநாயக நடைமுறைகள் மற்றும் யாப்பு விதிமுறைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும், குறித்த விவகாரங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.