Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட பதாகையை கிழித்து எடுத்துச் சென்றார் அருச்சுனா

19 Jun 2026, 12:11 PM
பார்வைகள்: 1,651
செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட பதாகையை கிழித்து எடுத்துச் சென்றார் அருச்சுனா

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்த பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாண நகரை அண்மித்த பிரதான வீதியொன்றில் சுமார் 10 அடி உயரமுடைய அருச்சுனா இராமநாதனின் பதாகை வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அடையாளம் தெரியாத நபர்களால் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தகாத வார்த்தைப் பிரயோகங்கள், சபை நாகரிகமற்ற நடத்தை மற்றும் கூட்டங்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் அருச்சுனா ஈடுபடுவதாக பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு தனது வாகனத்தில் சென்ற அருச்சுனா இராமநாதன், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை கிழித்து அகற்றியதுடன், அதனை தனது காரில் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், அது குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.