Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% உயர்வு

09 Jul 2026, 11:34 AM
பார்வைகள்: 266
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% உயர்வு

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் உயர்வடைந்துள்ளது.ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 5.95 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 78.50 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 5.95 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 74.60 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் போது பேசிய ட்ரம்ப், அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுவார்த்தையைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தைகள் தொடர்ந்து பதற்றமான நிலையிலேயே இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.