Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு – படகின் கேப்டன் கைது

13 Jul 2026, 02:39 PM
பார்வைகள்: 270
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு – படகின் கேப்டன் கைது

ஹனோய்: தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேக படகு கவிழ்ந்ததில் 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிவேக படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 வியட்நாமிய பணியாளர்கள் பயணம் செய்தனர். கடலுக்குள் புறப்பட்டு சிறிது நேரத்தில் கடும் அலைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக படகின் கேப்டன் Nguyen Hong Hai (57)-ஐ வியட்நாம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்வழிப் போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 3 பேர் ஆந்திரப் பிரதேசத்தையும், 2 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நாடு திரும்பியுள்ள நிலையில், ஒருவரின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தூதரகம் மற்றும் வியட்நாம் அதிகாரிகள் இணைந்து உயிரிழந்தோரின் உடல்களை சொந்த நாட்டிற்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்திற்கான காரணம் குறித்து வியட்நாம் அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.