Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க உயர்மட்டக் குழு: 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

28 Jul 2026, 10:23 AM
பார்வைகள்: 262
தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க உயர்மட்டக் குழு: 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

தமிழ்நாட்டின் வரி மற்றும் வரியல்லா வருவாயை நிலையான முறையில் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க, உயர்மட்ட வருவாய் பெருக்கக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சமீபத்திய வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் விகிதம் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதுடன், பல்வேறு வரி வருவாய்களிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, வருவாய் கசிவுகளைத் தடுத்து, வரி வசூலை மேம்படுத்தி, புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கும் நோக்கில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக் குழுவின் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அஹ்லுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி, நஜிப் ஷா (ஐ.ஆர்.எஸ்., ஓய்வு), எம்.ஏ. சித்திக் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ் பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாநிலத்தின் வரி மற்றும் வரியல்லா வருவாயை உயர்த்துவதற்கான கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவதுடன், புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறிதல், வருவாய் கசிவுகளைத் தடுப்பது, வரி வசூலில் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும்.