Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஹார்முஸ் நீரிணை திறப்பு எதிர்பார்ப்பு: உலக எரிபொருள் விநியோகம் சீராகும் வாய்ப்பு!

15 Jun 2026, 12:05 PM
பார்வைகள்: 116
ஹார்முஸ் நீரிணை திறப்பு எதிர்பார்ப்பு: உலக எரிபொருள் விநியோகம் சீராகும் வாய்ப்பு!

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளவில் முக்கியமான கடல்வழியான ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த எரிபொருள் விநியோகத் தடைகள் குறைந்து, உலக சந்தைக்கு நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணி ஈரானில் தாக்குதல் நடத்தியதையடுத்து, பிராந்தியத்தில் கடுமையான மோதல் சூழ்நிலை உருவானது. இதன் விளைவாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, விலைகள் உயர்ந்தன.

பின்னர், பல நாடுகளின் நடுநிலை முயற்சியால் அமெரிக்கா–ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு, தொடர்ந்த பேச்சுவார்த்தைகளில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 14 அம்ச திட்டத்தில் முக்கியமாக 30 நாட்களுக்குள் நீரிணையை முழுமையாக திறப்பது மற்றும் பொருளாதார தடைகளை தளர்த்துவது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது சமூக வலைதள பதிவில் “ஹார்முஸ் நீரிணையை கட்டணமின்றி திறக்க முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இதேவேளை, ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. நீரிணையில் காத்திருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் விரைவில் கடந்து செல்லும் நிலையில், உலக நாடுகளில் ஏற்பட்டிருந்த எரிபொருள் தட்டுப்பாடு குறையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.