Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

சியூட்டாவுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்

02 Aug 2026, 09:48 AM
பார்வைகள்: 193
சியூட்டாவுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்

மொராக்கோவைச் சேர்ந்த சுமார் 60,000 பேர் இரண்டு நாட்களுக்குள் ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டாவுக்குள் நுழைந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் மொராக்கோவுக்குத் திரும்பியுள்ளனர்.

வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலை வரை ஆயிரக்கணக்கானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் ஆபத்தான முறையில் கடல் வழியாக சியூட்டாவை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டப்பூர்வ அனுமதி இன்றி நுழைந்தவர்களில் பலரை ஸ்பெயின் அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்து, மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, சிலர் ஸ்பெயினுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும், சியூட்டாவுக்குள் நுழைந்த சில மணி நேரங்களிலேயே சுமார் 50,000 பேர் தங்களது சொந்த நாடான மொராக்கோவுக்குத் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரும்பிச் சென்றவர்களில் சிலர், சியூட்டாவில் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் கிடைக்காததால் மீண்டும் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், நீண்ட நேரம் நீந்தி வந்த தங்களை ஸ்பெயின் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதாகவும், கையில் பணம் இருந்தபோதிலும் உணவு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.