Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

உக்ரைனிடம் இழப்பீடு கோரிய ஈரான்; தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்

05 Aug 2026, 11:08 AM
பார்வைகள்: 277
உக்ரைனிடம் இழப்பீடு கோரிய ஈரான்; தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்

உக்ரைனில் மூன்று இடங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் உக்ரைன் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் ஈரானின் முன்னாள் உயர் அதிகாரி மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.

காஸ்பியன் கடலில் ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், கடைசி நேரத்தில் உக்ரைன் மன்னிப்பு கோரியதால் தாக்குதல் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரான் நிர்ணயித்த பாதைக்கு வெளியே செல்லும் எந்தவொரு கப்பலையும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், விதிமுறைகளை மீறும் எதிரிக் கப்பல்கள் குறிவைக்கப்படும் என்றும் மொஹ்சென் ரெசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜூலை 25 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலில், ஈரானியக் கப்பல் சேதமடைந்ததுடன், அதில் பணியாற்றிய ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்திற்கு உக்ரைன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த உக்ரைன், தனது அனைத்து நடவடிக்கைகளும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்களின் கப்பல்கள் அல்லது பொதுமக்களை குறிவைப்பது தங்களது நோக்கம் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.