Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தத்தளித்த அகதிகள்: 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

06 Aug 2026, 11:45 AM
பார்வைகள்: 219
15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தத்தளித்த அகதிகள்: 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பாலோரிக் தீவுகளை நோக்கி பயணித்த அகதிகள் படகு ஒன்று என்ஜின் கோளாறால் நடுக்கடலில் சிக்கியதில், அதில் பயணித்த 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகில் மொத்தம் 19 பேர் பயணம் செய்ததாக மீட்கப்பட்ட இருவர் தெரிவித்துள்ளனர். என்ஜின் பழுதடைந்ததால் படகு சுமார் 15 நாட்கள் கடலில் தத்தளித்ததாகவும், அந்தக் காலத்தில் உணவு மற்றும் குடிநீர் இல்லாததால் தங்களுடன் இருந்த 17 பேர் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்பெயின் கடலோர மீட்புப் படையினர் மல்லோர்கா தீவின் தென்மேற்கே சுமார் 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருந்து இருவரை உயிருடன் மீட்டனர். மேலும் உயிர் பிழைத்தவர்கள் அல்லது உடல்களை கண்டறியும் நோக்கில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வரும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்த ஆண்டில் மட்டும் 211 படகுகள் மூலம் 3,935 அகதிகள் பாலோரிக் தீவுகளை வந்தடைந்துள்ளனர்.

மேலும், கடந்த வாரம் மொராக்கோவில் இருந்து சுமார் 72,000 அகதிகள் செவுடா எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்றதாகவும், இந்த ஆபத்தான கடல் பயணங்களில் சுமார் 75 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.