Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

விமானத்தில் வந்த கொசு... ஜெர்மனியில் 2 விமான நிலைய ஊழியர்கள் பலி!

29 Aug 2026, 11:56 AM
பார்வைகள்: 179
விமானத்தில் வந்த கொசு... ஜெர்மனியில் 2 விமான நிலைய ஊழியர்கள் பலி!

பிராங்க்பர்ட்: மலேரியா நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஜெர்மனியில், விமானத்தில் வந்ததாக கருதப்படும் மலேரியா கொசுவால் 2 விமான நிலைய ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 6 ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் ஜூலை மாத தொடக்கத்திலும், மற்றொருவர் ஆகஸ்ட் மாதத்திலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜெர்மனியின் ராபர்ட் கோச் நிறுவனம் நடத்திய விசாரணையில், மலேரியா பரவும் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் வந்த அனோபிலிஸ் (Anopheles) வகை கொசுவால் இந்த நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விமானத்தின் கேபின் அல்லது சரக்கு பகுதியில் கொசு வந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் கொசுக்களைப் பிடிக்க சிறப்பு பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிடிபடும் கொசுக்கள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு அவற்றின் இனம் மற்றும் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜெர்மனியில் இதுபோன்ற ‘விமான நிலைய மலேரியா’ பாதிப்பு மிகவும் அரிதானது. கடந்த 2023-ம் ஆண்டிலும் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு மலேரியா பரவும் அபாயம் இல்லை என்றும், பொதுமக்களுக்கு தற்போதைய ஆபத்து மிகக் குறைவு என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.