Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்தி இரத்து செய்ய வேண்டும் – ஐ.நா. இலங்கைக்கு எச்சரிக்கை

05 Sep 2026, 10:58 AM
பார்வைகள்: 317
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்தி இரத்து செய்ய வேண்டும் – ஐ.நா. இலங்கைக்கு எச்சரிக்கை

எதிர்வரும் செப்டம்பர் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி, விரைவில் இரத்து செய்து அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலமாக நபர்கள் தடுத்து வைக்கப்படுவது தொடர்பிலும் அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதால் தன்னிச்சையான கைதுகளும், குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுவதும் இடம்பெற்றுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் காவலில் அல்லது தடுப்புக்காவலில் இடம்பெற்ற 18 மரணங்களும், 2026 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டில் சித்திரவதை மற்றும் கொடூரமான தாக்குதல்கள் தொடர்பாக 602 சம்பவங்களும், 2026 ஏப்ரல் மாதம் வரையில் மேலும் 138 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சில வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், யுத்த காலத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை நிலையான பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படவில்லை எனவும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட இராணுவ மற்றும் சிவில் புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளால் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுதல், அச்சுறுத்தப்படுதல் மற்றும் பழிவாங்கப்படுதல் தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள்

  • பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைக்காலமாக இடைநிறுத்தி, விரைவில் இரத்து செய்தல்.
  • அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்குதல்.
  • வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்தல்.
  • மேலதிக காணி சுவீகரிப்புகளை நிறுத்துதல்.
  • பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்தல்.
  • கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ICCPR சட்டம் உள்ளிட்ட சட்டங்களை திருத்துதல் அல்லது இரத்து செய்தல்.
  • வரைவு செய்யப்பட்டுள்ள NGO சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
  • சிறைச்சாலைகளில் காணப்படும் அதிக நெரிசல் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான சீர்திருத்தங்களை முன்னெடுத்தல்.
  • போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, சுகாதார அடிப்படையிலான மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துதல்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்வைத்துள்ள இந்த பரிந்துரைகள், எதிர்வரும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் முக்கிய விவாதப் பொருளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.