Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

சவுதி அரேபியா 24 மணி நேரத்தில் 58 தாக்குதல்களை நடத்தியதாக ஹவுதிகள் குற்றச்சாட்டு

14 Sep 2026, 12:07 PM
பார்வைகள்: 491
சவுதி அரேபியா 24 மணி நேரத்தில் 58 தாக்குதல்களை நடத்தியதாக ஹவுதிகள் குற்றச்சாட்டு

சவுதி அரேபியா கடந்த 24 மணி நேரத்தில் தங்களது நிலைகள் மீது 50க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஏமனின் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் இராணுவத் தளம் ஒன்றை இலக்காகக் கொண்டு ஹவுதிகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சவுதி தரப்பில் இருந்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஹவுதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏமனில் ஜூலை மாதம் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஹவுதிகள் செங்கடலில் சவுதி அரேபியாவை நோக்கி கடல்வழி முற்றுகையை அறிவித்து, அந்நாட்டுடன் தொடர்புடைய கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், சவுதி ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும் ஹவுதிகளுக்கும் இடையிலான மோதலும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

ஏமனின் செங்கடல் கரையோரப் பகுதிகளை ஹவுதிகள் கைப்பற்றி, பாப் அல்-மண்டப் நீரிணை மீதான தங்களது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக இடம்பெற்று வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே தற்போதைய மோதல் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்று கடல்வழிப் பாதையாக செங்கடல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரம் ஹவுதிகள் சவுதி அரேபியா மீது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதன்போது எண்ணெய் நிலையங்கள் தீப்பற்றியதுடன் 73 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை முதல் தங்களது நிலைகள் மீது 100க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ள போதிலும், இந்தக் கூற்றை சவுதி அரேபிய அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஏமன் உள்நாட்டுப் போர்

ஏமனின் உள்நாட்டுப் போர் 2014ஆம் ஆண்டு ஹவுதிகள் தலைநகர் சனாவைக் கைப்பற்றி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றியதைத் தொடர்ந்து தீவிரமடைந்தது.

இதையடுத்து, 2015ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கும் ஹவுதிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்றன. 2022ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மோதல்கள் ஓரளவு தணிந்திருந்தன.

எனினும், கடந்த ஜூலை மாதம் முதல் நிலைமை மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை சவுதி சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அபஹா நகரம் மற்றும் கமிஸ் முஷைத் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பின்னர் அந்த எச்சரிக்கைகள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.