Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொருளாதாரம்

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனா தயாராக இருப்பதாக சீனத் தூதுவர் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.

15 Sep 2026, 12:14 PM
பார்வைகள்: 886
இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனா தயாராக இருப்பதாக சீனத் தூதுவர்  (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த உயர்தொழில்நுட்ப உதவிகளை வழங்க சீனா தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவை நேற்று (14) சந்தித்தபோதே சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மார்ட் விவசாயத் தொழில்நுட்பங்கள் தொடர்பில் சீனத் தூதுவர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

அலைபேசி செயலிகளின் ஊடாக பயிர்களுக்கு ஏற்ற மண், ஈரப்பதம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளை அளவிட்டு, அதற்கேற்ப விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நவீன தொழில்நுட்பத்தை சீனா உருவாக்கியுள்ளதாகவும், அந்தத் தொழில்நுட்ப உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடல் நீரிலும் வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட கலப்பின நெல் வகைகள் மற்றும் வறண்ட, ஈரமான காலநிலைக்கு ஏற்ப நிலத்தைத் தயார்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் சீனாவிடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சேவை, கைத்தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே நேரத்தில் அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவமும் இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத் துறைகளின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையின் தற்போதைய விவசாய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த விவசாய அமைச்சின் செயலாளர், இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் மக்காச்சோளத் தேவையில் சுமார் 50 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குத் தேவையான பெரும்பாலான விவசாய இயந்திரங்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கை விவசாயிகளுக்காக சீன அரசாங்கம் முன்னெடுத்து வரும் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் ஏற்கனவே பங்களித்து வருவதாகவும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களிலும் சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.