Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

17 Sep 2026, 12:12 PM
பார்வைகள்: 492
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளை நாட்டுக்கு அழைத்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், தற்காலிக வீசாவில் வசிப்பவர்கள் மற்றொரு வகை வீசாவுக்கு மாறுவதற்கான விதிமுறைகளையும் அரசாங்கம் கடுமையாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆண்டுக்கு சுமார் 300,000 ஆக உள்ள நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்வு எண்ணிக்கையை, 2028ஆம் ஆண்டுக்குள் 225,000 ஆகக் குறைப்பதற்கு அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வெளிநாட்டு மாணவர்களின் வாழ்க்கைத்துணைகளுக்கு அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனினும், புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் இந்தச் சலுகைகள் கட்டுப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நிகரப் புலம்பெயர்வு எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 518,000 ஆக உச்சத்தை எட்டியிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 429,000 ஆகக் குறைந்தது. 2025 ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 306,000 ஆக பதிவாகியுள்ளது.

இதில் சுமார் பாதியளவினர் வெளிநாட்டு மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்காலிகப் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை மூன்று ஆண்டுகளில் 750,000 ஆகக் குறைக்க வேண்டும் என வலதுசாரி ‘ஒன் நேஷன்’ கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்தத் திட்டம் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பின்னர் அதிகரித்த புலம்பெயர்வு காரணமாக நாட்டின் வீடமைப்புத் துறை, உட்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகள் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.