Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

நடு வானில் விமானிகளுக்கிடையே மோதல்: சவூதி அரேபியாவில் தரையிறக்கப்பட்ட விமானம்!

01 Oct 2026, 10:35 AM
பார்வைகள்: 241
நடு வானில் விமானிகளுக்கிடையே மோதல்: சவூதி அரேபியாவில்  தரையிறக்கப்பட்ட விமானம்!

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய் (flydubai – FZ1073) விமானத்தின் உதவி விமானி, முதன்மை விமானியை கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த விமானம் சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு “பயங்கரவாதத் தாக்குதல்” முயற்சியாக இருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஓமான் நாட்டைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்ட குறித்த உதவி விமானி, தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, விமானத்தின் பணிக்குழாம் உறுப்பினர்கள் (cabin crew) விமானிகளின் அறைக்குள் (cockpit) நுழைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஜோர்தான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் திடீரென 30 வினாடிகளுக்குள் சுமார் 14,000 அடிகள் வேகமாக கீழே இறங்கியதைத் தொடர்ந்து அவசர சமிக்ஞைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் இல்லாத சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபூக் (Tabuk) விமான நிலையத்தை நோக்கி விமானம் திருப்பி விடப்பட்டுப் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

காயமடைந்த இரண்டு விமானிகளும் தபூக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.