Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

கச்சத்தீவு, கடற்தொழில் ஒப்பந்தங்களை மீள்பரிசீலிக்க எண்ணமில்லை – இந்திய மத்திய அரசு

07 Oct 2026, 09:47 AM
பார்வைகள்: 151
கச்சத்தீவு, கடற்தொழில் ஒப்பந்தங்களை மீள்பரிசீலிக்க எண்ணமில்லை – இந்திய மத்திய அரசு

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள் தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிப்பதற்கோ அல்லது அவற்றை மீளத் திறப்பதற்கோ எந்தவிதமான எண்ணமும் இந்திய மத்திய அரசுக்கு இல்லை என, இந்திய உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையுடன் இந்தியா தொடர்ந்தும் நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நேற்று (06) நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

நீதியரசர்களான சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் ஆஜரான இந்திய சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி, இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கவலைகள் தொடர்பில் இந்திய அரசு இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தவோ அல்லது அதற்கேற்ப செயற்படுமாறு இலங்கையை கட்டாயப்படுத்தவோ முடியாது என்றும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முக்கியத்துவம் பெறுகின்றன.