Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

இஸ்ரேல் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக ஃப்ளைதுபாய் துணை விமானி மீது குற்றச்சாட்டு!

10 Oct 2026, 10:21 AM
பார்வைகள்: 362
இஸ்ரேல் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக ஃப்ளைதுபாய் துணை விமானி மீது குற்றச்சாட்டு!

இஸ்ரேல் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் நோக்கில், ஃப்ளைதுபாய் விமானத்தைக் கடத்தி டெல் அவிவ் விமான நிலையத்தில் மோதச் செய்யத் துணை விமானி ஒருவர் திட்டமிட்டதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி, ஃப்ளைதுபாய் விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றதாகக் கூறப்படும் 29 வயதுடைய துணை விமானி, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களால் ஈர்க்கப்பட்டே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கருதுவதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுச் செய்தி நிறுவனமான WAM வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தலைமை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஹமத் சைஃப் அல்-ஷம்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபரின் திட்டம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல் அவிவ் நகரத்தையும் அங்குள்ள விமான நிலையத்தையும் நன்கு அறிந்துகொள்ளும் நோக்கில், குறித்த சந்தேக நபர் முன்னதாக இரண்டு முறை அப்பகுதிக்கு விமானத்தில் பயணம் செய்திருந்ததாகப் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், ஜனவரி மாதம் ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர், ஓமன் ஏர் மற்றும் ரோயல் ஏர் மரோக் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களில் அவர் பணியாற்றியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பில் பாதுகாப்புக் குறைபாடுகள் இல்லை எனத் தகவல்

ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை ஆய்வு செய்த புலனாய்வாளர்கள், சந்தேக நபர் விமானி உரிமம் உள்ளிட்ட தேவையான தொழில்முறை ஆவணங்களையும் நன்னடத்தைச் சான்றிதழையும் சமர்ப்பித்திருந்ததுடன், நிறுவனத்தின் தொழில்முறை மற்றும் பாதுகாப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், ஆட்சேர்ப்பு நடைமுறைகளின்போது அவரது தீவிரவாதக் கருத்துகள் அல்லது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் நோக்கம் தொடர்பான எந்தவொரு அறிகுறியும் கண்டறியப்படவில்லை என அரசுத் தரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் மீது நேரடியாக எந்தத் தவறும் சுமத்தவில்லை. மாறாக, சந்தேக நபரின் திட்டம் தொடர்பாக அரசுத் தரப்பு இதுவரை வெளியிட்ட விரிவான விளக்கமாக இது அமைந்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதலே தீவிரவாதப் போக்கு?

சந்தேக நபர் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களைப் பார்வையிட்டதுடன், குத்துச்சண்டைப் பயிற்சிகளிலும் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்காகத் தன்னை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயார்படுத்திக்கொண்டதாகவும் அவர் கூறியதாக அல்-ஷம்சி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த நபர் 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை நோக்கிய அவரது போக்குக்கான அறிகுறிகள் தென்பட்டதாக விசாரணை முடிவுகள் சுட்டிக்காட்டுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் வேறு எவரும் பங்கேற்கவில்லை என்றும், தனியொரு நபராகவே செயற்பட்டதாகவும் சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தனது நோக்கம், திட்டமிடல் மற்றும் அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில், தனது வழக்கறிஞர் முன்னிலையில் அவர் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.