Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு, 309 பேர் காயம்!

11 Oct 2026, 02:34 PM
பார்வைகள்: 387
ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு, 309 பேர் காயம்!

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் நான்கு பேர் சவுதி அரேபியக் குடிமக்கள் எனவும், ஏனைய எட்டு பேர் பங்களாதேஷ், அமெரிக்கா, எகிப்து, ஜோர்தான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் எனவும் சவுதி அரேபியாவின் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் அதிகாரிகள் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் தங்களது விமானப் பயணங்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஹூதி அமைப்பின் ஊடகப் பிரிவுத் தலைவர் எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், தமது அமைப்பு ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், யேமன் அரசாங்கம் திங்கட்கிழமை ஹூதி அமைப்புக்கு எதிராகத் தாக்குதல்களை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வான்பரப்பை போர் நடவடிக்கை மண்டலமாக ஹூதிகள் அறிவித்துள்ளதாகவும், அந்த வான்பரப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் குறிப்பிட்ட அவர், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹூதி அமைப்புக்கு எதிராக யேமனில் சவுதி அரேபியா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவும் இணைந்துகொள்ளக்கூடும் என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான சாத்தியக்கூறுகளை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.