Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான நடவடிக்கை: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

19 Jun 2026, 12:24 PM
பார்வைகள்: 560
ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான நடவடிக்கை: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்கும் நோக்கில் எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதல்களை மேற்கொள்ள நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.நான்கு மாதங்களாக நீடித்துவரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக இரு தரப்பினரும் மின்னணு முறையில் தற்காலிக ஒப்பந்தத்தில் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக திறக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவிய பதற்றம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கடல்வழி வர்த்தகம் மீண்டும் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக கருத்து வெளியிட்ட டிரம்ப், பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், ஆனால் ஈரான் ஒப்பந்த நிபந்தனைகளை மீறினால் அமெரிக்கா கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன் ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை தளர்த்த அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதன் மூலம் ஈரான் சர்வதேச சந்தைகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இந்த முன்னேற்றம் உலக எரிசக்தி சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதோடு, எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த அச்சங்களையும் குறைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.