Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

தாய்லாந்தில் 2,000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டுபிடிப்பு.

07 Jul 2026, 11:53 AM
பார்வைகள்: 88
தாய்லாந்தில் 2,000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டுபிடிப்பு.

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் அமைந்துள்ள டான் யாய் தாங் (Don Yai Thong) தொல்லியல் தளத்தில் நடைபெற்ற அகழாய்வில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இரண்டு அரிய தங்க மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு, பண்டைய இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் கலாசார தொடர்புகளுக்கு புதிய ஆதாரமாக கருதப்படுகிறது.தாய்லாந்து நுண்கலைத் துறையின் (Fine Arts Department) மேற்பார்வையில் நடைபெற்ற அகழாய்வின்போது, மனித எலும்புக்கூடுகளுடன் இந்த தங்க மோதிரங்கள் மீட்கப்பட்டன. அவற்றில் ஒரு மோதிரம் எளிய வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், மற்றொரு மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால பிராமி (Brahmi) எழுத்தில் பொறிக்கப்பட்ட வாசகம் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பொறிப்பில் இடம்பெற்றுள்ள வாசகம், "புஷ்யா நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்" என்ற பொருளை தரக்கூடும் என ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பண்டைய இந்திய எழுத்து, மதம் மற்றும் கலாசாரத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசியாவில் இருந்ததை வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.இந்த அகழாய்வில் தங்க மற்றும் வெண்கல ஆபரணங்கள், மட்பாண்டங்கள் மற்றும் பல்வேறு தொல்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அந்தக் காலத்தில் சமூக அந்தஸ்து, வணிகம் மற்றும் சடங்கு மரபுகள் மேம்பட்ட நிலையில் இருந்ததை சுட்டிக்காட்டுவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவை நிறைவடைந்த பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.