Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

கடும் வெப்பம் எதிரொலி: இங்கிலாந்தில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

07 Jul 2026, 11:55 AM
பார்வைகள்: 81
கடும் வெப்பம் எதிரொலி: இங்கிலாந்தில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

ஐரோப்பாவை தாக்கியுள்ள வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சில பள்ளிகள் மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியுள்ளன.வெப்பநிலை பல பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால், வகுப்பறைகளுக்குள் கடும் வெப்பம் நிலவியது. போதுமான காற்றோட்ட வசதியும் குளிர்சாதன வசதியும் இல்லாததால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் மயங்கி விழுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

பள்ளிகள் இயங்கிய பகுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சூடான மதிய உணவுகளுக்குப் பதிலாக ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் மற்றும் இலகு உணவுகள் வழங்கப்பட்டதுடன், வகுப்பறைகளில் கை விசிறிகள், தண்ணீர் தெளிப்பான்கள் மற்றும் கூடுதல் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.இதற்கிடையில், அதிக வெப்பநிலை காரணமாக விளையாட்டு தினங்கள் மற்றும் வெளிப்புற உடற்கல்வி நடவடிக்கைகளும் பல பள்ளிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, கடும் வெப்பம் நிலவும் நேரங்களில் வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் வெப்ப அலைகள் அடிக்கடி மற்றும் தீவிரமாக உருவாகி வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், பள்ளிகள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களில் வெப்பத்தை சமாளிக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.