Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஐரோப்பாவில் மீண்டும் கடும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

08 Jul 2026, 02:49 PM
பார்வைகள்: 84
ஐரோப்பாவில் மீண்டும் கடும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஐரோப்பாவை மீண்டும் தாக்கக்கூடிய கடுமையான வெப்ப அலை உருவாகி வருவதாகவும், அடுத்த சில வாரங்கள் மிகவும் சவாலானதாக அமையக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகள் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களும் உருவாகியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், 41 நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அண்மைய வெப்ப அலைகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்கள், பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால முன்னெச்சரிக்கைத் திட்டங்கள் குறித்து இதில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் மற்றொரு கடுமையான வெப்ப அலை உருவாகி வருவதாகவும், அதன் தாக்கம் காரணமாக ஐரோப்பாவில் இன்னும் அதிக வெப்பமான நாட்கள் நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.மேலும், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வரும் நாட்களில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.