இந்தநாட்டில் முந்தைய அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், புதிய ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைநாளான டிசெம்பர் 10தினத்தன்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் அவரின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மிக நீண்ட நாட்களாக இந்த வீதிகளில் இறங்கி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், தங்களுடைய உறவுகளை வட்டுவாகல் பகுதியிலும், ஓமந்தையிலும், முகாம்களிலும், இப்படியாக பல இடங்களிலும் கைதுசெய்து சென்ற இராணுவத்தினர், அவ்வாறு கைதுசெய்தவர்களை மீளக் கையளிக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.