காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு ஏக்கர் கணக்கில் இலவச நிலம் !

user 10-Mar-2025 இந்தியா 115 Views

இந்தியாவின்(india) காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில், தொழிற்சாலை அமைக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு(muttiah muralitharan) இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் இந்திய சட்டசபையில் பெரும் வாத பிரதிவாதம் நடந்துள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முத்தையா முரளிதரன் இப்போது வியாபாரியாக மாறிவிட்டார். இலங்கையில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது கம்பெனியின் பெயர் சிலோன் பீவெர்ஜ் என்பதாகும்

இந்நிலையில் தற்போது முத்தையா முரளிதரன் நிறுவனத்தால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது முத்தையா முரளிதரன் நடத்தி வரும் சிலோன் பீவெர்ஜ் நிறுவனம் சார்பில் ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கான் தயாரிப்பு ஆலை என்பது ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்காக முத்தையா முரளிதரனுக்கு 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தை முத்தையா முரளிதரன் நிறுவனத்துக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தான் வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போடப்பட்டு உள்ளது. தற்போது, இந்த விவகாரம் வெளியாகி சட்டசபையில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

சட்டசபையில் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தாரிகாமி ,' இது முக்கியமான விஷயம். இது குறித்து விசாரிக்க வேண்டும்' என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜிஏ மிர் கூறுகையில், இந்தியர் அல்லாதவருக்கு இலவசமாக நிலம் கொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜாவேத் அஹமது தர், இது வருவாய்த்துறை தொடர்பானது. எங்களிடம் எந்த தகவலும் இல்லை. உண்மையை அறிய விசாரணை நடத்துவோம் என்றார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சிலோன் பீவரேஜ் ஒரு நாள் முன்பு (மார்ச் 6) திட்டத்திலிருந்து பின்வாங்க விண்ணப்பித்துள்ளது, மேலும் "இப்போது புனேவில் போத்தல் மற்றும் கான் உற்பத்தி ஆலையை நிறுவும்" என்பதும் தெரியவந்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி