சிறப்பையும் வனப்பையும் உடைய சிவம் என்கின்ற பரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் தமிழருக்கே உரிய வாழ்வியல் நெறி சைவம். இச்சைவநெறியை அருநெறி, திருநெறி, பெருநெறி, ஒருநெறி என்றெல்லாம் சம்பந்தப்பெருமான் தம் பாடல்களில் குறிப்பிடுவார். இச்சைவநெறி இல்லறம், துறவறம் என்ற இரண்டினையும் வலியுறுத்துகின்றது. எனவேதான் “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என ஒளவை பிராட்டியும், “இல்லறம்” என்ற ஓர் அதிகாரத்தைத் தமிழ் வேதமான திருக்குறளில் திருவள்ளுவரும் பாடியுள்ளனர். அதே போன்று மேற்கூறிய இருவரும் துறவறத்தைப் பற்றியும் பாடியுள்ளனர். செந்தமிழ்ச் சிவநெறியினைக் காட்டும் பெரியபுராணமும் இல்லறத்திலும் துறவறத்திலும் வாழ்ந்து வீடுபேறு பெற்ற அடியார் பெருமக்களின் வரலாற்றினைக் கூறுகிறது.
வாழ்க்கைத் துணையைத் தேர்தல்
பழந்தமிழர் தங்கள் வாழ்க்கைத் துணையைத் திருவருளை முன்நிறுத்தித் தெரிவு செய்தனர். ஆடவரும் பெண்டிரும் இறைவன் திருவருளால் தங்களுக்கு நல்ல துணை அமைய வேண்டும் என்ற வாழ்வியல் முறையினைக் கொண்டிருந்தனர். காதல், வீரம், அழகு என்பவை ஒரு புறமிருக்க இறைநாட்டம் உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கினர். எனவேதான் நம் தமிழ்ப் பெண்கள் நாட்டில் நல்ல மழை பெய்யவும், நல்ல கணவர்கள் அமையவும் மார்கழி மாதந்தோரும் பாவை நோன்பு நோற்றனர். இறைவழிபாடு செய்யக் கூடிய கணவர்கள் தங்களுக்கு அமைய வேண்டுமென இறைவனை நோன்பு நோற்று வழிபட்டனர். இதனைத் தமிழ் மந்திரமான திருவாசகம், ” எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க” எனவும் ” உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார்அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்” எனவும் குறிப்பிடும்.
இத்தகைய பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அக்கால ஆடவர்கள் தங்களைத் தயார் செய்து கொண்டு வாழ்ந்தனர் என்பது நுட்பமாய் உணரவேண்டியுள்ளது.
இல்லறத்தார் முறைமை அன்பு பாராட்டுதல்
பைந்தமிழரின் உயரிய வாழ்வியல்நெறி அன்பு பாராட்டுவது. அன்பைச் சிவத்தோடு வைத்துப் பேசியிருக்கிறார்கள். எனவேதான் தமிழாகமமான திருமந்திரம், “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” என்று கூறுகிறது. தமிழ் மந்திரத்தால் கல்லைக் கடலில் மிதக்கச் செய்த நாவரசு பெருமானும், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று அருளினார். எனவேதான் திருவள்ளுவ நாயனாரும், தெய்வம் அல்லது இறைவழிபாட்டினை இயற்றுவது இல்லறத்தார்க்கான அடுத்த முகான்மையான கூறாகக் குறிப்பிடுகின்றார். இறைவனைத் தொழாவிடில் கற்ற கல்வியினால் பயன் ஒன்றும் இல்லையென்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர், ஓளவையோ, “நீறில்லா நெற்றி பாழ்” என்பார். இல்லறத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் இறைவழிபாட்டினைச் செய்வது இன்றியமையாதது என்று சைவம் குறிப்பிடுகிறது. இறைவழிபாடே ஒருவருக்கு மனக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தி நன்னெறியில் நிற்கச் செய்கிறது. இதனால் கணவன், மனைவி, பிள்ளைகள் போன்றோரிடம் ஒழுங்கீனச் செயல்கள் குறையவும், பணிவு, பொறுமை, உண்மை, ஒழுக்கம், சான்றான்மை போன்ற உயரிய பண்புகள் மேலிடவும் வழியுண்டு. இன்றைய அதிகமான மணவிலக்குகளுக்குக் காரணமாய் அமைவது நற்பண்புகளும் இறை அச்சமும் அன்பும் இல்லாமையால் தான். சமய அறிவு இல்லாமையால் “நான்” என்கின்ற முனைப்பும் அறியாமையும் ஏற்படுகிறது. எனவே இறைவழிபாட்டோடு நின்றுவிடாமல் இறைக்கல்வியைக் கற்கவும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கவும் இல்லறத்தார் தவறுதல் கூடாது. மனைவிக்கு இறைநெறியை அல்லது வீட்டுநெறியைச் சொல்லிக் கொடுப்பவரைத்தான் தமிழர்கள் “வீட்டுக்காரர்” என்றார்கள். கணவனை வீட்டுநெறிக்கு ஆளாக்குகின்ற இல்லாளைத் தான் “வீட்டுக்காரி” என்றார்கள் நம் முன்னோர். எனவே தான் பெரியபுராணத்தில் இயற்பகையாரின் மனைவி தன் கணவரைத் தம் உயிருக்குத் துணையான, “ஆன்ம நேயர்” என்று சொல்லி, அவர் தம்மை அடியாருக்குக் கொடுத்துவிட்டதை, உறுதியாகத் தன் நன்மைக்கே என்று, வந்த அடியாருடன் போவதற்கு இணங்கினார்.
இல்லறத்தார் பிள்ளைகளுக்குச் சமய கல்வியைப் பெற்றுத் தந்து அவர்களைப் பண்புடையவர்களாய் ஆளாக்க வேண்டும். இதுதான் அவர்களைக் கல்விக் கேள்விகளிலும் பிறவற்றிலும் சிறக்கச் செய்து, நன்மக்களாய் மாற்றும். இத்தகைய நற்செயல் ஏழு பிறவிக்கும் தீயவற்றைப் பெற்றோருக்குத் தராது என்பதை,
” எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா பண்புடை மக்கள் பெறின் ” என்று வான்புகழ் வள்ளுவர் கூறி மகிழ்வார். நற்பண்புகள் உடையவராயும் தம் குடும்பத்தினரை நற்பண்புகள் உடையவர்களாயும் தேற்றியதனால் தான் சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி சமைத்து வீடுபேறு அடையவும், அடியாருக்கு அமுது படைத்து அப்பூதி அடிகள் வீடுபேறு அடையவும், அவரவர் மனைவியும் மக்களும் பெருந்துணையாய் நின்றனர். அமர்நீதி அடிகளோ தம் சீர்மிகு குடும்பத்தினரோடு இறைவன் திருவடியை அடையும் பேறு பெற்றார்.
வருவிருந்தைப் பேணுதலும் சைவம் காட்டும் இல்லறத்தில் இன்றியமையாததாகக் கிடக்கிறது. விருந்து என்பதை இதுவரை நமக்கு அறிமுகமில்லாதவர் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர். எனவே பசியோடு வருகின்ற அறிமுகமில்லாத எவரையும் இன்முகத்தோடு அழைத்து உணவளிப்பதையும் வேண்டுவன அளிப்பதையும் சீர்மிகு சைவநெறி குறிப்பிடுகின்றது. இதற்கென “விருந்தோம்பல்” எனும் அதிகாரத்தையே வள்ளுவப் பெருந்தகை பாடியுள்ளார். திருமூலர் திருமந்திரம் “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு ” என்கிறது. “ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என வள்ளல் பெருமானும், “அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே” என தாயுமானரும், “மன்னுயிர் ஒம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப, தன்னுயிர் அஞ்சும் வினை” என திருவள்ளுவரும் இதனையே குறிப்பிடுகின்றனர். எனவேதான் பெரிய புராணத்திலும் இல்லறத்தில் அன்பு பூண்டு வாழ்வது இறைவன் திருவடி என்கின்ற நிலையினைத் தருவிக்கும் என்று பாடுகிறார்.