இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக அதிகரிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்ட நிலையில் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் 2028 ஆம் ஆண்டு அடுத்த ஊடக உரிமை வழங்கும் காலத்தில் தொடரை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் தொடரில் புதிதாக அணிகளை சேர்க்கும் திட்டம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் கூறுகையில், ‘ஐ.பி.எல். இல் ஒவ்வொரு அணியும் முழுமையாக உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணையை விரிவுப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இத்தகைய பாணியில் ஆடும் போது, மொத்தம் 94 ஆட்டங்கள் நடத்த வேண்டி இருக்கும். அதே நேரத்தில் 94 ஆட்டங்கள் என்றால் போட்டிக்குரிய நாட்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டி இருக்கும்’ என்றார்.