மாதவி கோவலன் மீது கொண்ட காதல் வெறும் ஊடல் அல்ல

user 07-Jan-2026 கட்டுரைகள் 49 Views

 காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தாமாதர் கொடுங்குழை மாதவி தன்னொடு “என்பது சிலம்பின் வரிகள்.

காதலன் காதலி ஆகியோர் காதலித்து மகிழும் போதும் அல்லது ஓரிடம் சென்று இல்லற வாழ்வில் இணையும் போதும் ஊராரால் அலர் தூற்றப்படுவது உண்டு.

அலர் என்பது பழிச்சொல் அல்லது வதந்தி. ஊர் வாயை அடக்க முடியாது என்றப் பேச்சு வழக்கு ஒன்று உண்டு. அக்காலங்களிலேயே காதலிப்போரை பற்றி இப்படி ஊர்மக்கள் அலர் தூற்றியுள்ளச் செய்தி சிலப்பதிகாரத்திலும் கிடைக்கிறது.

தன்னுடைய மனைவியைப் பிரிந்து வந்த கோவலன் மாதவியோடு இணைந்து இன்பவாழ்வில் திளைத்தாலும் அதனால் மாதவிக்குப் பழிச்சொல் வரவில்லையாம்.

கொடுங்குழை ஆகிய காதணி அணிந்த மாதவி ஆனவள் கண்ணகியின் கணவனோடு மாளிகையில் வாழ்ந்த போதும் பழிச்சொல் அவளுக்கு வரவில்லை.

1008 பொன்கழஞ்சுகள் கொடுத்து பசும் பொன் மாலையை வாங்கி மாதவி என்னும் மாதரசியை தனக்கு உரியவளாக ஆக்கிக் கொண்டான் கோவலன்.

கணிகையர் குலத்தில் ஆடல் மகளிராகத் தோன்றினாலும் அழகில் உயர்ந்த மாதவியும் கோவலனை அன்றிப் பிறிதொரு ஆண் மகனைத் தனது உள்ளத்தாலும் நினைக்காதவாறே இருந்தாள். அவள் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டவளாக இருந்திருந்தால் கோவலனை சில நாட்களில் கைவிட்டு வேறு ஒருவரை நாடியிருக்கலாம். ஆனால் தனது காதல் மணாளனை கற்புக்கரசி கண்ணகியைப் போலவே தெய்வமாகக் கருதி தனது உயிரைப்போல கண்ணின் மணியைப் போல காத்துப் பேணினாள்.’ மாதவி வேத்தியல், பொதுவியல் என இருவேறு கூத்துகளிலும் சிறந்து ஆடியவள். அதாவது அரங்கத்தின் உள்ளே மன்னருடன் அமைச்சர்கள் போன்றோர் மட்டும் பார்க்கும் வேத்தியல் கூத்து மற்றும் ஊர் மக்கள் அனைவரும் பார்க்க ஆடும் பொதுவியல் கூத்து இரண்டையும் அழகாக பயின்று ஆடியவள். அவளது தொழிலே ஆடல் பாடல் செய்து கலை வளர்ப்பதே. மேலும் கோவலனின் மனைவி கண்ணகி இருக்க மாதவியின் அழகில் மோகம் கொண்டு கண்ணகியை விட்டு வந்தவன் என்றாலும் அவனை உளமாற நேசித்தாள் .

இருவரும் ஒருவரை ஒருவர் மாறி புக்கு இதயம் எய்தினார் ‘ என்ற கம்பனின் வரிகளுக்கு ஏற்ப அங்கே அவர்களிடம் இதயப் பரிமாற்றம் ஏற்பட்டது.

மாதவி கோவலனை அடைந்தபிறகு நடந்த இந்திரவிழாவில் நாட்டியமாடினாள். அவள் ஆடிய11 வகையான கூத்துகளையும் காண கயிலாய மலையிலிருந்து வித்தியாதரன் ஒருவன் தனது காதலியுடன் பூம்புகார் வந்தான் எனச் சிலப்பதிகாரம் சொல்கிறது. பெருமைமிகு வெள்ளிமலை என்று சொல்லப்படும் கயிலாயமலையில் உள்ள வித்தியாதர உலகு எனும் பகுதியில் வாழ்ந்த இளைஞன் வித்தியாதரன். அங்கு சேடி என்னும் அழகிய இடத்தில் மன்மதனுக்கு நடந்த விழாவைக் கண்டு மகிழ்ந்து பின்னர் பூம்புகாரில் இந்திரவிழா காண தன் காதலியோடு வந்தான்.

மாதவி இந்திரவிழாவில் நடனம் ஆடியபோது ஒவ்வொரு கூத்திற்கும் ஏற்றவாறு அணிகலன்கள் அணிந்து அழகுச் சுரங்கமாய்க் காட்சியளித்தாள்.

மாதவி இந்திரவிழாவில் அனைவருக்கும் முன்பாக நாட்டியமாடியதில் கோவலனுக்கு மனவருத்தம் ஏற்பட்டது எனலாம். தான் மட்டும் காண வேண்டிய அழகை ஊரார் கண்டு ரசிப்பதை அவன் முழுமையாக விரும்பவில்லை. மாதவி தனக்கு மட்டும் உரியவள் என்கிற நிலையில் இருந்து மாறி பிற ஆடவர்கள் அவள் ஆடலையும் அழகையும் இரசிப்பது கண்டு அவன் மகிழவில்லை. அதனால் ஊடல் கொண்டான்.

அவன் ஊடலைத் தணிக்க அவனை மகிழ்வோடு வைத்திருக்க மாதவியானவள் தன்னை மேலும் அழகுபடுத்திக் கொண்டு மலர்ப்படுக்கையில் அவனோடு கூடினாள்.

மாதவி அப்போது உடம்பிற்கும் குறிப்பாக பாதங்களுக்கு தடவிய வாசனை வண்ணக் குழம்புகள் பற்றியும் அவளது கார்மேகக் கூந்தலுக்கு தடவிய மணம் தரும் திரவங்கள் பற்றியும் அவளது உடம்பில் அணிந்த அணிகலன்கள் பற்றியும் பெரிய பட்டியலே சொல்கிறார் இளங்கோவடிகள். இயற்கையழகு இயல்பிலேயே பிரமிக்க வைக்க அதனோடு மற்ற ஒப்பனைகள் சேர்ந்தவளாய் தனது உள்ளம் கவர் தலைவன் கோவலனை அவனது விருப்பதிற்கு ஏற்றவாறு மகிழ்வுறச் செய்தனள்.

28 நாட்கள் நடந்த இந்திர விழா முடிந்து மக்கள் கடற்கரையில் கூடி மகிழ்வோடு கடலில் நீராடச் சென்றனர். மாதவியும் கடலில் நடக்கும் கொண்டாட்டத்தை விளையாட்டுகளைக் காண கோவலனுடன் கடற்கரைக்குச் சென்றாள்.

Related Post

பிரபலமான செய்தி