Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கிண்ணியாவில் சட்டவிரோத மண் அகழ்வு: 12 பேர் கைது; 12 வாகனங்கள் பறிமுதல்

09 Jul 2026, 11:31 AM
பார்வைகள்: 401
கிண்ணியாவில் சட்டவிரோத மண் அகழ்வு: 12 பேர் கைது; 12 வாகனங்கள் பறிமுதல்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, உப்பாற்றுக் கங்கை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 சாரதிகளை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், மண் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட 12 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடந்த 7ஆம் தேதி இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் உரிய அனுமதியின்றி ஆற்றுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.நடவடிக்கையின் போது மண் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த 7 டிப்பர் வாகனங்கள் மற்றும் 5 உழவு இயந்திரங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 12 பேரும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.