Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மாணிக்கக்கல் அகழ்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் சுற்றுச்சூழல் பாதிப்பு – நோர்வூட் மக்கள் கவலை

16 Jul 2026, 02:34 PM
பார்வைகள்: 195
மாணிக்கக்கல் அகழ்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் சுற்றுச்சூழல் பாதிப்பு – நோர்வூட் மக்கள் கவலை

நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்ட குழிகள் இதுவரை மூடப்படாததால், சுற்றுச்சூழல் பாதிப்பும் தொழிலாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டம், கெசல்கமு ஓயா பகுதி மற்றும் நோர்வூட் என்.சி தேயிலைத் தோட்டப் பிரிவுகளில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அகழ்வுக்காக தேயிலைச் செடிகள் சேதப்படுத்தப்பட்டு, பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ள போதிலும் அவை மீண்டும் மூடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தேயிலைத் தொழிலாளர்கள் தோட்டங்களில் பாதுகாப்பாக பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மண் அரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், கெசல்கமு ஓயா மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் செல்லும் பகுதிகளில் இரவு நேரங்களில் பெருமளவிலானோர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவதாகவும், இதனால் நீர்வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மூடப்படாமல் விடப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி நுளம்புகள் பெருகுவதால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 
 

புகைப்பட தொகுப்பு (Gallery)