Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைக்கு பின்னரே இறுதி முடிவு – அமைச்சர்

20 Jul 2026, 11:47 AM
பார்வைகள்: 129
முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைக்கு பின்னரே இறுதி முடிவு – அமைச்சர்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது கொலையா அல்லது தற்கொலையா என்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளியான பின்னரே இறுதியான முடிவுக்கு வர முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர், சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் காவல்துறைமா அதிபரின் மெய்ப்பாதுகாவலர், மனைவி, மகன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், துப்பாக்கிச் சூட்டினால் அவர் உயிரிழந்தமை திறந்த நீதவான் நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட அனைத்து சான்றுப்பொருட்களும் அறிவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.இதனால், தற்போதைய நிலையில் இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து எந்தவிதமான இறுதி முடிவையும் அறிவிக்க முடியாது என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னரே அதிகாரப்பூர்வ தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, முன்னாள் காவல்துறைமா அதிபரின் மரணம் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடனும், பக்கச்சார்பற்ற முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.இந்நிலையில், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் அடைய முயற்சிப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குற்றஞ்சாட்டினார்.